நிபந்தனையற்ற காதல் எப்படி இருக்கும் தெரியுமா..?
28 மாசி 2023 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 5931
இதுதான் காதல், காதல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்குள் வரையறுக்க முடியாது. இருப்பினும் உண்மையாக நேசிப்பது, பரஸ்பர நம்பிக்கை, புரிதல் ஆகியவை காதல் குறையாமல் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவும். இந்த நிலையில், இவை எல்லாவற்றையும் கடந்து காதலில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், என்ன நடந்தாலும், எப்படி இருந்தாலும் உன்னை நேசிப்பேன், அன்பும் காதலும் எப்போதும் மாறாது என்பது நிபந்தனையற்ற காதலை குறிக்கிறது. நிபந்தனையற்ற காதல் என்று கூறப்படும் இந்த ஆழமான, அபரிமிதமான நேசம் இருந்தால் பிரிவே ஏற்படாது.
முழு மனதாக ஒருவரை நேசிப்பது தான் நிபந்தனையற்ற காதல் என்று குறிப்பிடப்படுகிறது. தனக்கு வசதியாக இருக்கும் பொழுது, சவுகரியமாக இருக்கும் பொழுது பிடித்த போதெல்லாம் அன்பையும் காதலையும் தெரிவிப்பது உண்மையான காதல் இல்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது கசப்பான அனுபவங்களாக இருந்தாலும் சரி, மோசமான சூழ்நிலைகளில் கூட ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதாவது, இருவரில் ஒருவர் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது உறவை வலுப்படுத்தும். ஆனால் எப்பொழுதுமே ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கிவ் அண்ட் டேக் பாலிசி என்று கூறுவது போல பரஸ்பரம் இருவரும் புரிந்து நடந்து கொள்வது அவசியம்.
காதல் மட்டுமல்ல, கனிவாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டும் : அன்கண்டிஷனல் லவ் என்று வரும்பொழுது, ரொமான்ஸ் என்பது மட்டும் கிடையாது. தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இருவரில் ஒருவர் கடினமான சூழலை எதிர்கொள்ளும்போது அவருக்கு தேவையான இடைவெளியை கொடுக்க வேண்டும், அல்லது எதிர்வாதம் செய்யாமல் தேவைப்படும் உதவியை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக விவாதங்கள் வரும் பொழுது, யாரேனும் ஒருவர் பொறுமையாக கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
ஏற்றுக் கொள்வதும், மன்னிப்பதும் அவசியம் : எவ்வளவு வலுவான உறவு மற்றும் ஆழமான புரிதல் இருந்தாலுமே கருத்துவேறுபாடுகள் நிச்சயமாக ஏற்படும். இதில் நல்ல விஷயங்களுக்காக கூட கருத்து வேறுபாடுகள் மற்றும் சின்ன சின்ன சண்டைகள் தோன்றும். இந்த சின்ன சண்டைகளை பெரிதாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும் பொழுது காரசாரமான விவாதங்கள் நடந்து அல்லது சண்டைகள் முடிந்த பிறகு, அதை வேறொரு நாளில் வளர்க்காமல், அப்படியே விட்டுவிட வேண்டும். தவறு செய்தவர்கள் அதை உணர்த்து மன்னிப்பு கேட்கும் பொழுது, அதை ஏற்றுக்கொண்டு மறக்க வேண்டும்.
மனம் விட்டுப் பேசுவது : எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட மனம் விட்டு பேசினால் அதற்கு தீர்வு கிடைத்து விடும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் ஒரு சில விஷயங்கள் பேசாமல் இருப்பதால் தான் தீவிரமான பிரச்சனையாக மாறுகிறது. எனவே மனம் விட்டு பேசுவது வெளிப்படையாக உரையாடுவது, என்பது மிக மிக முக்கியம். குறிப்பாக கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தவறான புரிதலை களைய, வெளிப்படையாக பேசவது முக்கியம். நிபந்தனையற்ற காதல் என்பது வரும்பொழுது இதில் சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் இடம் இல்லை.
அன்பையும் காதலையும் வெளிப்படுத்த வேண்டும் : ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவார்கள். காதலிக்கத் தொடங்கிய பிறகு திருமணமான புதிதில் வெளிப்படுத்தப்படும் அன்பும் காதலும், காலம் செல்ல செல்ல குறைந்து விடும். ஆனால் நிபந்தனையற்ற காதல் என்று வரும் பொழுது சாத்தியமான நேரத்தில் எல்லாமே உங்களுடைய அன்பையும் காதலையும் தெரிவிக்க வேண்டும். எந்தவித காரணங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல், முழுமையாக நேசிக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு இது உதவும்