Paristamil Navigation Paristamil advert login

கழுகுகள் நமக்கு கற்றுதரும் வாழ்க்கைப் பாடம் !

கழுகுகள் நமக்கு கற்றுதரும் வாழ்க்கைப் பாடம்  !

4 தை 2023 புதன் 06:35 | பார்வைகள் : 7788


 ஒரு பெண் கழுகு தன் குஞ்சுகளுக்கு தந்தையாக ஆண் கழுகை எப்படி தேர்ந்தெடுக்கின்றது என்பது தெரியுமா?

பெண் கழுகு குச்சியொன்றை எடுத்து உயரமாகப் பறந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். அதைச் சுற்றி சில ஆண் கழுகுகள் ஒன்று சேரும். 
அப்போது பெண் கழுகு குச்சியை கீழே வீசும். 
 
ஆண் கழுகுகளோ குச்சி தரையில் விழுவதற்கு முன்பே அதைப் பிடிக்க முயலும். அதில் ஒரு கழுகு குச்சியை எடுத்து வந்து பெண் கழுகிடம் ஒப்படைக்கும். ஆனால் பெண் கழுகு குச்சியை மீண்டும் மீண்டும் கீழே எறியும். எந்த ஆண் கழுகு சோர்வடையாது குச்சியை தொடர்ந்தும் எடுத்து வருகின்றதோ அந்த ஆண் கழுகைத்தான் தனது ஜோடியாக தேர்ந்தெடுக்கும்.
 
அது ஏன் அப்படி செய்கின்றது? நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.பின்னர் இரண்டு கழுகுகளும்  வாழ்வதற்கான தங்கள் கூட்டினை உயரமான இடத்தில் அமைக்கும். பொதுவாக வலுவான, கரடுமுரடான கிளைகளிலிருந்து கூடு கட்டப்படும்.
 
ஆனால் பெண் கழுகு முட்டையிடுவதற்கு முன்பு இரண்டு கழுகுகளும் தங்கள் உடலில் மென்மையான இறகுகளைப் பிடுங்கி கூட்டை சூழ வைத்து விடும். காரணம் குஞ்சுகள் பொரிக்கும் போது கூடு மென்மையாகவும் சூடாகவும் இருக்கும்.  
 
குஞ்சு பொரித்த பிறகு இரண்டு கழுகுகளும் தங்கள் குஞ்சுகளை மழை,வெயிலில் இருந்து தங்கள் உடல் மற்றும் இறக்கைகளால் பாதுகாக்கும். குஞ்சுகள் வளரும் வரை உணவு கொண்டு வந்து கொடுக்கும்.
 
குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளர்ந்தவுடன் தந்தை கழுகு கூட்டின் விளிம்பில் அமர்ந்து, கூட்டை மூடியிருந்த அனைத்து இறகுகளையும் அகற்றிவிடும். அந்த வலுவான கரடுமுரடான கிளைகள் மட்டும் எஞ்சியிருக்கும்.
 
தாய் கழுகோ உணவு கொண்டுவர சென்று விடும். ஆனால் இந்த முறை எப்போதும் செய்தது போல் கூடுகளுக்கு உணவைக் கொண்டு வராது கூடு இருக்கும் இடத்தில் இருந்து சற்று தூரத்தில் நின்று தனியாக மிகவும் மெதுவாக சாப்பிடத் தொடங்கும். இது குஞ்சுகளின் பசியைத் தூண்டும். உடனே இளம் கழுகுகள் கூட்டில் இருந்து வெளியேறி பறந்து வர முயற்சிக்கும். ஆனால் குஞ்சுகளுக்கு பறக்க தெரியாததனால் கீழே விழுந்து விடும். 
 
இப்போதுதான் தந்தை கழுகின் வேலை வருகின்றது. கீழே விழும் குஞ்சுகளை தனது முதுகில் சுமந்து வந்து மீண்டும் கூட்டுக்குள் வைக்கும். மீண்டும் மீண்டும் குஞ்சுகள் தாயிடம் செல்ல முயற்சித்து கீழே விழும். தந்தை கழுகும் மீண்டும் மீண்டும் குஞ்சுகளை காப்பாற்றும்.இவ்வாறுதான் சிறிய கழுகுகள் பறக்கக் கற்றுக் கொள்கின்றன.
 
இங்கிருந்து ஏன் பெண் கழுகு தன் குஞ்சுகளுக்காக தியாகம் செய்யும் ஆண் கழுகினை தந்தையாக தேர்வு செய்கின்றது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
 
இதில் எமக்கு மிகப்பெரும் படிப்பினை உள்ளது.பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களது வாழ்க்கையில் தைரியம், தன்னம்பிக்கை என்பவற்றை வழங்குவதுடன் சறுக்கி விழும்போதும், வழிதவறும் போதும் அவர்களை வழிப்படுத்தி ஆளாக்குவது தந்தையின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்