எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசவில்லை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
8 புரட்டாசி 2023 வெள்ளி 07:15 | பார்வைகள் : 4054
“எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தவர் பழங்குடியினர் பெண்ணினத்திற்கு எதிரான 'சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்' என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
அடக்குமுறை சிந்தனை நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளை சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்த பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரசாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.
சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை 'சனாதனம்' என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார்.
உதயநிதி சொன்னது என்ன?
இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள்.
இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வடமாநிலம் முழுவதும் பரப்பியது. 'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை.
ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள். பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. முதல்-மந்திரிகள் - உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும்.
உ.பி. அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா?
மாறாக, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச் செய்தியையே பரப்பி உதயநிதியைக் கண்டித்துள்ளார்கள்.
நான் அப்படி பேசவில்லை' என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை மத்திய மந்திரிகள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, 'தலைக்கு 10 கோடி' என்று விலை வைத்திருப்பதும் -
அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா? அமைச்சரின் தலைக்கு விலைவைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தரபிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.
உண்மையை அறியும் வசதி
இந்த நிலையில், 'சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்' என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு செய்தி வந்தால், அது உண்மையா - பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?
தேர்தலை பார்த்து பயம்
மணிப்பூர் பற்றியோ - சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ரூ.7.50 லட்சம் கோடி மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும், மத்திய மந்திரிகளும் இன்னும் வாயே திறக்கவில்லை.
ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், மத்திய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா?.
பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, 'இந்தியா' கூட்டணி அல்ல.
நாட்டை காக்கும் கடமை
பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. 'இந்தியா' கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு.
இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை. அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறாப் பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.க.விடம் இருந்து நாட்டைக் காக்கும் கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள்.
சுயமரியாதை மனிதர்கள்
தி.மு.க.வை பொறுத்தவரையில் அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்பவை வெளிப்படையானவை. பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடி மக்களுக்கும்; சிறுபான்மைச் சமூகத்துக்கும்; பெண்ணினத்துக்கும்; ஏழை - எளிய மக்களுக்கும் 'எல்லாம்' கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது உயர்வுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். அதனால்தான் 6-வது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
எந்தத் தனிமனிதர் உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் தி.மு.க. இனம், மொழி, சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒருதாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதிசெய்து வரும் இயக்கம்.
பா.ஜ.க.தான் மூழ்கும்
கொள்கையை அறிவுப் பிரசாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.
அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.