Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் - மத்திய மந்திரி தகவல்

பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் - மத்திய மந்திரி தகவல்

8 புரட்டாசி 2023 வெள்ளி 14:25 | பார்வைகள் : 4340


கடந்த 4 ஆண்டுகளில், பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தலைமறைவானவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.

சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது.

மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், போலீஸ் பதக்கங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- நடப்பு ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி முதல், ஆண்டுதோறும் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் கொண்டாட ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது. சி.பி.ஐ. சிறந்த விசாரணை அமைப்பாக மாறியுள்ளது.


சொத்துகள் பறிமுதல் 

கடந்த 2018-ம் ஆண்டு, பொருளாதார குற்றவாளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளில், பொருளாதார குற்றவாளிகளும், தலைமறைவு நபர்களும் வேட்டையாடப்பட்டனர்.

இதன் பலனாக, 4 ஆண்டுகளில், பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு நபர்களுக்கு சொந்தமான 1.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுபோல், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப்படி, அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களிடம் கடந்த 9 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் (ரூ.98 ஆயிரத்து 400 கோடி) மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 

நாடு கடத்தல் 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இன்டர்போல் மாநாட்டை இந்தியா நடத்தியது. அதில் இருந்து தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பிற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. 

அதனால், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19 தலைமறைவு குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 10 குற்றவாளிகள் வீதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர் என்று அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்