20 ஐப்பசி 2020 செவ்வாய் 08:33 | பார்வைகள் : 8867
மனதை உலுக்கும் சம்பவங்களோ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதமோ நடக்கும்போது கவலை, பதற்றம் உண்டாகும். திடீரென்று நடக்கும் சோக சம்பவங்கள் துக்கத்தை அதிகப்படுத்தும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதன் தாக்கம் வெளிப்படும். நோய் பாதிப்புக்கு ஆளானவர்களாக இருந்தால் அவர்களின் வலி, வேதனை அதிகமாகும். சிலருக்கு மார்பில் வலி உண்டாகும். இத்தகைய பயம், பீதியை நிறைய பேர் வாழ்நாளில் ஓரிரு முறை யேனும் அனுபவிப்பார்கள். எதிர்பாராதவிதமாக ஏற்படும் பீதியால் சுவாசத்தில் தடுமாற்றம், வியர்வை, நடுக்கம், இதய துடிப்பு அதிகரிப்பு, நெஞ்சுவலி, பயம், குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருசில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பீதி, பதற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
* ஏதாவதொரு விஷயத்தை கேள்விப்படும்போதோ, எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்போதோ பீதி, பதற்றம் எட்டிப்பார்க்கும். அப்போது மனதுக்குள் புதைந்திருக்கும் உள்ளார்ந்த பயத்தை போக்குவதற்கு முயற்சிப்பது நிலைமையை சமாளிக்க உதவும்.
* இதய துடிப்பு அதிகரிப்பது பதற்றத்தின் பொதுவான அறிகுறியாகும். அதன் தாக்கமாக பீதியும் வெளிப்படும். அந்த சமயத்தில் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமானது. அதுதான் பதற்றத்தை தணிக்க உதவும். நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழமாக சுவாசிப்பது உடல், மனதை இயல்பு நிலைக் கொண்டுவர உதவும்.
* கண்களை மூடுவதும் பீதி, பதற்றத்தை சமாளிக்க உதவும். அமைதியான இடத்தில் உட்கார்ந்து நிதானமாக தியானம் செய்யலாம். அது மனதை இலகுவாக்கும். உடலையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும்.
* தியானம் போல யோகாசனம் செய்வதும் மனதையும், உடலையும் நிதானமாகவும், அழுத்தம் இல்லாமலும் வைத்திருக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. லேசான உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பீதி, பதற்றத்தையும் சமாளிக்கவும் உதவும்.
* எதிர்பாராதவிதமாக மன வேதனைக்குள்ளாகும் போது நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும். மந்திரங்களை உச்சரிப்பது மனதில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் போக்க உதவும். ‘எல்லாம் சரியாகிவிடும்’, ‘இதுவும் கடந்து போகும்’ என்பது போன்ற சொற்களை உச்சரித்து வரலாம்.
* பீதி, பதற்றத்திற்கு ஆளாகும்போது மனதுக்கு பிடித்தமான இடங்களை மனத்திரை முன்பு கொண்டு வர முயற்சிக்கலாம். நிதானமாக அந்த இடங்களை மனக்கண்ணில் சித்தரிக்க வேண்டும். இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்த உதவும்.
* பீதி ஏற்படும்போது உடலில் நடுக்கம் எட்டிப்பார்க்கும். தசைகளும் இறுக்கமடையும். அந்த சமயத்தில் தசைகளை தளர்வடைய செய்வது பீதி தாக்குதலில் இருந்து விடுபட வழிவகுக்கும். கை, கால் விரல்களை மெதுவாக அசைப்பதும், மடக்கி விரிப்பதும் தசை களின் இறுக்கத்தை போக்கி இலகுவாக்கும்.