Paristamil Navigation Paristamil advert login

தற்கொலை முடிவை கைவிடுங்கள்

தற்கொலை முடிவை கைவிடுங்கள்

21 புரட்டாசி 2020 திங்கள் 07:18 | பார்வைகள் : 9258


 தற்கொலை என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால் அது பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான வழி என சிலர் கருதி தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். அது நம்மவர்களுக்கு பிரச்சினையையும், அவமானத்தையும், சுமையையும் கொடுத்து விடும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.

 
பொதுவாக மக்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சூழ்நிலை கைதியாக மாறி தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றனர். கடன்தொல்லை, கணவன்-மனைவி பிரச்சினை, தொழில்ரீதியான நஷ்டம், இலக்குகளில் தோல்வி, காதல் தோல்வி, உடல்நல பிரச்சினைகள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியாது போன்ற பெரும்பான்மையான காரணமாக உள்ளன. முதலில் வறுமையும், இழப்பும் நம் குற்றமல்ல என்பதை உணருங்கள். துன்பங்களை கண்டு நாம் அஞ்சாவிடில் துன்பங்கள் நம்மை கண்டு அஞ்சும் நிலை ஏற்படும் என நினைவில் கொள்ளுங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் மனதினை மாற்றிக்கொள்ளும் இயல்பை மேம்படுத்தி கொள்ளுங்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதால் முடிந்தவரை ஆசைகளை குறைத்து கொள்ளுங்கள்.
 
 
நமக்கு பின்னால் நம்மைப்பற்றி பேசும் கேலி பேச்சுக்களையும், குற்றச்சாட்டுக்களையும், நமது முன்னேற்றத்திற்கான தூண்டுதலாக எண்ணுங்கள். இதுபோன்ற நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றும் இயல்பை வளர்த்து கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு பிரச்சினையின் போதும், நம் மீது தவறு என்ன என உணர முயற்சியுங்கள்.
 
துன்பங்கள் என்பவை அனுபவங்களை நமக்கு தரக்கூடியது. பிறர்சொல் கேட்டு நடப்பதை காட்டிலும், அனுபவங்களே சிறந்த ஆசானாக கருதப்படுகிறது. துன்பங்களில் காணும் இன்பமே புதுமையை தரக்கூடியது. மேலும் துன்பங்கள் இல்லாமல் வரும் இன்பம் நேர்மையான வழியில் வருவது அல்ல. அது கட்டாயமாக நிலையானதும் அல்ல. இயற்கையும் கூட இந்த உலக நியதியை உணர்த்துகிறது. வசந்த காலத்தில் வரும் பசுந்தளிர்களுக்கு முன்பு உள்ள வெறுமையான மரத்தினை போல நம் வாழ்விலும் துன்பங்களுக்கு பிறகு வரும் இன்பம் தான் ரசனைக்குரியதாக மாறும்.
 
முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். எதனையும் நம்மவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அனைத்து தற்கொலைக்கும் காரணம் மனஅழுத்தமே ஆகும். முக்கியமாக மன அழுத்தம் வர காரணம் மனநிலையே ஆகும். அதாவது இந்நிகழ்விற்கு பிறகு நம்மைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ? என்பதே ஆகும். இந்த மனநிலையை அடியோடு அழித்திடுங்கள். அதற்கு பதிலாக அவர்கள் முன்னால் இனி எப்படி முன்னுதாரணமாக வாழ்ந்து, நம்மை பற்றிய மனநிலையை மாற்றுவது என சிந்தியுங்கள்.
 
மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இச்சமூகத்தில் இயற்கைக்கு மாறாக நம்மை சார்ந்தோரை பிரிந்து செல்லுதல், மாபெரும் வலியை ஏற்படுத்திவிடும் என மறந்து விடாதீர்கள். எதுவுமே நிலையில்லாத இவ்வுலகில் உங்கள் துன்பங்கள் மட்டும் எப்படி நிலையாகும் என்பதில் நிலையாக இருப்போம். மாணவ செல்வங்களே வருங்கால தூண்களாகிய நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம். தற்கொலை என்னும் முடிவை கைவிடுங்கள். அது உங்களுக்கும், உங்களை சார்ந்தோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்