உறங்கிக்கிடக்கும் ஹார்மோன்களை உசுப்பிவிடும் முத்தம்
25 ஆவணி 2020 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 9109
முத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. செல்லக்குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திலிருந்து காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் வரை எல்லாமே உணர்வின் ஊற்றுதான். முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.
காதலர்கள் ஒருவர் மாறி ஒருவர் கொடுக்கும் முத்தம் என்பது உணர்ச்சிப்பெருக்கில் வெளிப்படுவதாகும். அதை வெறும் காமம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. அரவணைப்பு, தொடுதல், வருடுதலுடன் கொடுக்கும் முத்தத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகவே கவலையில் இருக்கும் ஒருவரின் கரம் பற்றியோ, இறுக அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னால் அவர்களது பாதி கவலைகள் பறந்துவிடும். அப்படித்தான் இந்த முத்தமும். மிகச் சாதாரணமாக முத்தம் கொடுத்தாலே உறங்கிக்கிடந்த ஹார்மோன்கள் சிறப்பாக வேலை செய்யும்போது அழுத்தமாக முத்தம் கொடுக்கும்போது கேட்கவா வேண்டும்?
முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நெருக்கத்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும். குறிப்பாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு முத்தம் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொடுக்கும் `பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் முத்தத்தின்போது தலைவலி, மன அழுத்தம் போன்றவை விலகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தியானத்துக்கு ஈடானது முத்தம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குறிப்பாக காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது அருகே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு இருப்பார்கள். அதை ஒரு தியான நிலை என்றே சொல்லலாம். இதன்மூலம் முத்தம் கொடுப்பவருக்கும் முத்தம் பெறுபவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பெருக்கெடுக்கும். கூடவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
கன்னத்தில் முத்தமிடுவதைவிட இரு கன்னங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுப்பதே அன்பின் உச்சம். நம்பிக்கை அதிகரிக்கும் இந்த முத்தம் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். கூடவே, உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுவதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை வார்த்தைகளால் சொல்லிமாளாது.
ஒருவர் மது அருந்தினால் எந்த அளவு போதை ஏற்படுமோ அந்த அளவு முத்தமிடும்போது போதை ஏறும் என்று கூறப்படுகிறது. கூடவே உடலில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுமாம். உதட்டுடன் உதடு ஒட்டிக்கொண்டு முத்தமிடும்போது ஆக்சிடோசின் சுரப்பு அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தம்பதியருக்கு இது நல்ல பலன் தரும் என்கிறார்கள்.
குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டால் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்பது தெரியவந்துள்ளது. இதய நோய் குறைவதுடன் தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீரடைவதாகவும் கூறப்படுகிறது.
முத்தமிடுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்கு உரியவருக்கு முத்தமிடுங்கள். காதலியை முத்தமிடுவதில் தவறில்லை. அது எல்லை மீற வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. சத்தமின்றி முத்தமிடுங்கள். அடுத்தவருக்கு இடையூறு இல்லாதவாறு முத்தமிடுங்கள், தவறில்லை.