Paristamil Navigation Paristamil advert login

அடக்கக் கூடாத சிறுநீர்

அடக்கக் கூடாத சிறுநீர்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10211


 சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்குகிறார்கள். 

இது ஆபத்தானது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரை அடக்குகிறார்கள். பொதுவாக மனிதனின் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். எப்போதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது. 

அதிலும் பெண்கள் சிறுநீரை அடக்க கூடாது. இதனால் பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்க  நேரிடும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சிறுநீரை அடக்கக்கூடாது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். 

மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர்ப் பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தும் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து விடும். 

இந்த திசுக்கள் தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்றத் தூண்டுகின்றன. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். சிறுநீர் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும். இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படவும் சிறுநீர்ப்பையில் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. 

நாட்கள் செல்லச் செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல் இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். சிறுநீர் கழித்து முடிந்ததும், அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவது தான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது.

எழுத்துரு விளம்பரங்கள்