Paristamil Navigation Paristamil advert login

நன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..

நன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..

22 மார்கழி 2020 செவ்வாய் 07:19 | பார்வைகள் : 8773


 ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே எடுத்துக்காட்டாக கருதப்படுவார்கள். வெளிஇடங்களில் அவர்களுடைய பழக்கவழக்கம் அந்த அளவுக்கு பாராட்டத்தக்கதாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் அவரது உண்மையான முகம் தெரியும். வீட்டில் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்வார்கள். எப்போதுமே நமது நல்லபழக்கவழக்கங்கள் அனைத்தும் நமது வீட்டில் இருந்தே தொடங்கப்படவேண்டும். வெளியேயும் அது தொடரவேண்டும்.

 
நன்றி என்கிற விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்வீர்கள். நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் நண்பர் அவரது வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார். அவருக்கு நீங்கள் நன்றி சொல்வீர்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதபோது உங்களோடு மருத்துவமனை வரை வந்தவருக்கும் நன்றி சொல்வீர்கள். அடை மழை. வெளியே சென்று உணவருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும்போது வீடு தேடிவந்து ஒரே ஒரு முறை உணவளித்தவருக்கும் நன்றி தெரிவிப்பீர்கள்.
 
 
நிச்சயமாக இவை அனைத்துமே நன்றி தெரிவிக்கவேண்டிய நல்ல விஷயங்கள்தான். வீட்டுக்கு வெளியே இப்படி உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லும் நீங்கள், வீட்டிற்குள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். வீட்டிற்குள், உங்களுடனே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு எத்தனையோ உதவிகளை செய்துகொண்டே இருக்கிறார். ஒரு நாளாவது அவருக்கு நன்றி தெரிவித்திருப்பீர்களா?
 
இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கும்போது, ‘கணவன்- மனைவிக்குள் அப்படி நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!’ என்று நீங்கள் பதில்சொன்னால், அது தவறு. ஏன்என்றால் ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பின்னால் அவர் தூங்குகிறார். ஆனால்உங்களுக்கு முன்னாலே காலையில் எழுந்து சமைக்கிறார். உங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்து உங்களை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இப்படிப்பட்ட மனைவிக்கு நன்றி சொல்வதுதானே கணவருக்கு அழகு! நன்றியை கணவரிடம் கேட்டு வாங்கும் மன நிலையில் மனைவி இல்லாவிட்டாலும், அவரும் நன்றியை எதிர்பார்ப்பார் என்ற நிஜத்தை புரிந்துகொள்ளுங்கள்.
 
அதுபோல் மனைவியும் கணவருக்கு நன்றி சொல்லலாம்! நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும். அம்மாவும், அப்பாவும் ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டினால், அதை கேட்டு வளரும் அவர்களது குழந்தைகளிடமும் நன்றி பாராட்டும் எண்ணம் உருவாகும். அவர்கள் வீட்டிற்குள் நன்றி பாராட்ட ஆரம்பித்து அதை வெளியேயும் தொடருவார்கள். அதன் மூலம் அவர்கள் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதராவார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்