கணவரின் தவறான உறவு பெண்கள் செய்ய வேண்டிவை
13 தை 2018 சனி 11:32 | பார்வைகள் : 8906
காதலர் அல்லது கணவர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்தால் பெண்கள் நிலைகுலைந்து போவார்கள். ஆண்களின் இரட்டைச் சவாரி வாழ்க்கை பெண்களை மனதளவில் ரொம்பவே பாதித்துவிடும். அவரால் மேலும் தொல்லைகள், பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தவறாக நடக்கும் ஆணின் தொடர்பை துண்டிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
கணவரின் அத்தகைய மோசமான நடவடிக்கைகளுக்கு தான் காரணம் இல்லை என்ற மனோதைரியத்தை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் அவருடன் பேசிப் பார்க்க வேண்டும். முடிவுகள் சுபமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருந்து பிரச்சினையை அணுக வேண்டும். ஒருபோதும் தவறை அனுமதித்து வாழப் பழகிவிடக்கூடாது.
மன்னிப்பு பலசமயங்களில் மருந்தாகவும், பலமாகவும் அமையும். மன்னிக்கத் தெரியாதவர்கள் பலகீனமானவர்களே. மறப்போம் மன்னிப்போம் என்ற புரிதலுடன் செல்வது, ஒரு வடுமிக்க தருணத்தில் இருந்து உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். மன்னிக்க முடியாத குற்றம் என்று மனதில் விரோதமும், வஞ்சமும் வளர்த்துக் கொண்டிருப்பதால் மேலும் தீமைகளே விளையலாம்.
சில நேரங்களில் சாதாரண ரகசியப் பழக்க வழக்கங்களை, நீங்கள் குத்திக்காட்டிப் பெரிதாக்குவதால் பிரச்சினை விபரீதமாக முற்றிப் போகக்கூடும். அது முன்பைவிடவும் கடுமையான துயரங்களுக்கு இட்டுச் செல்லும். எனவே வாழ்க்கைத் துணையை இழக்காமல் இருக்க முதலில் கண்டிப்புடன் பேசி மன்னிக்க முயற்சிக்கலாம். அது உங்கள் மீது பெரிய மரியாதையை உருவாக்கி அவர்களை நல்வழியில் நடக்கச் செய்யலாம். மேலும் தவறுகள் தொடர்வதை அறிந்தால் நீங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
எந்த சந்தர்ப்பங்கள் தவறான உறவுகள் ஏற்படவும், எல்லை மீறவும் வாய்ப்பாக அமைந்ததோ, அதுபோன்ற சந்தர்ப்பங்கள், சந்திக்கும் வாய்ப்புகள் திரும்பவும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே வழியில் அலுவலக பயணம் செல்வது, வீடு திரும்புவது, வெளியிடங்களில் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற சூழல்களை தவிர்க்க வேண்டும்.
போன் உரையாடல்கள், வலைத்தளத்தில் கருத்துப் பகிர்வது போன்றவற்றை கண்காணித்து தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் இணங்கினால் சேர்ந்து வாழலாம், இல்லாவிட்டால் பிரிவுதான் தீர்வு என எச்சரிக்கலாம். உங்களிடம் இல்லாத எது, அவரை தவறான வழியில் பயணிக்க வைக்கிறது என்பதை கண்டறிந்து கொண்டு, உங்கள் பக்க குறையையும் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்கிறார்கள்.
தவறுகள் தெரியத் தொடங்கியதும் தாம்தூம் என்று குதித்து, பொது இடங்களில் உண்மையை உணர்த்துவதாக கருதிக் கொண்டு அவரையும், உடனிருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்தக்கூடாது. இது கோபத்தைத் தூண்டி எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். தவறை எதிர்க்கும் தைரியத்தையும், திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கும் கருணையையும் ஒருசேர வைத்துக்கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும். கணவரிடம் நாம் வாழ்க்கை எனும் நெடிய பந்தத்தில் இணைந்திருக்கிறோம். இது தவறு என்பது உங்களுக்கும் தெரியும். உங்கள் ஆசைகள் வெறும் ஈர்ப்பினால் உண்டானது. தவறான வழியில் சென்று வாழ்வை தொலைத்துக் கொள்ளாதீர்கள் என்று கனிவுடன், எச்சரிக்கையும் கலந்து பேசலாம்.
அவர் தவறை உணர்ந்து இறங்கி வருபவராக இருந்தால் கருணை காட்டலாம். இல்லாவிட்டால் பிரச்சினையை இன்னும் துணிவாக, தயங்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும். பிரிவையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் போராடி அவரது உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.