முறையற்ற உறவுக்கு உளவியல் ஆலோசனைகள்
13 மார்கழி 2017 புதன் 12:36 | பார்வைகள் : 9038
திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாக உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்கள். பலருடைய மனதிலும் அலைபாயும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சியாகவே இந்த அத்தியாயத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்…
தாம்பத்திய உறவில் கணவனோ, மனைவியோ பரஸ்பரம் திருப்தியடையாத நிலை தொடர்ந்து வருடக்கணக்காக நீடித்தால் வேறு துணை தேட நினைக்கின்றனர். திருமணமான ஆரம்பத்தில் தீவிரமாக இருப்பவர்கள், கொஞ்ச நாட்களில் சம்பாத்தியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தாம்பத்திய உறவுக்குக் கொடுப்பதில்லை. பசி, தூக்கம்போல செக்ஸும் ஓர் அடிப்படைத் தேவை என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை. தம்பதிகளிடையே ஏற்படும் பெரும்பாலான உளவியல் பிரச்னைகளின் ஆணிவேரைப் பார்த்தால் போதுமான தாம்பத்திய உறவு இல்லாததே முக்கியக் காரணமாகத் தெரிய வரும்.
செக்ஸில் கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. தனது துணையுடன் மேற்கொள்ளும் ஆரோக்கியமான உறவினால் ஏற்படும் புத்துணர்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. தினமும் என்று இல்லாவிட்டாலும் வாரத்துக்கு இருமுறை உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது உசிதம்.
கணவர் ஆதரவாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. வாழ்வின் நளினமாக நேரங்களை இணையுடன் சேர்ந்து ரசிக்க தவறுவது. வேலை முடிந்து வந்தால் களைப்பு, தூக்கம் என்று காலங்கள் கழிவது. இந்த இடத்தில் மூன்றாம் நபர் உள்ளே புகுந்தால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.
இந்த பிரச்சனைக்கு தாம்பத்திய உறவை படிப்படியாக, அணுஅணுவாக ரசித்து ஈடுபட வேண்டும். காமத்தின்போது முன் விளையாட்டு எனப்படும் ‘ஃபோர்ப்ளேயை பலரும் பின்பற்றுவதில்லை. இன்றும் அநேக பெண்களுக்கு ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலை என்ன என்பதே தெரியாமல் இருப்பது ஆணின் அலட்சியமே. பெண்களின் காமத்தை உணர்ந்து புரிந்து, மெல்ல மெல்ல இன்பத்தின் இறகுகளை வருடி அவர்களை இன்பத்தின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லுதல் என்பது ஒரு கணவனைப் பொறுத்தவரை கடமை என்றே சொல்லலாம்.
‘பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் ரகத்தினர் இருக்கிறார்கள். இவர்களின் இளம் வயது காதல் தீவிரம் எப்போதும் குறையவே செய்யாது. எப்போதும் ரொமான்ஸ் மூடிலேயே திரிவார்கள். அழகான ஆணைப் பார்த்ததும் ‘கண்டேன் காதலை’ என்பார்கள். திருமணமே ஆனாலும் இன்னொருவரை காதலிப்பதில் சுய ஆட்சேபணை இவர்களிடம் இருப்பதில்லை. இப்படியாக இரண்டாவது, மூன்றாவது என சங்கிலித் தொடர் தொடர்புகளை சட்டப்பூர்வமாக்கிக்கொள்பவர்களும் உண்டு. கேட்டால் அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள்.
உங்கள் இடத்தில் உங்கள் துணையை நிலைநிறுத்திப் பாருங்கள். உங்கள் துணை இதனை செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்பதை சிந்தியுங்கள். இன்னொரு ரகத்தினர் இருக்கின்றனர். இவர்களுக்கு செக்ஸில் ஈடுபாடு அதிகம் எனலாம். எத்தனை துணை இருந்தாலும் அடுத்து என்ன என யோசிப்பார்கள்.
இவர்களுக்கு சரியான உளவியல் ஆலோசனை நிச்சயம் தேவை.