திருமண பந்தம்: ஒளிவு மறைவு நிச்சயம் தேவை
7 மார்கழி 2017 வியாழன் 12:45 | பார்வைகள் : 9137
கணவன்-மனைவிக்குள் ஒளிவு மறைவு வேண்டாம் என்று வெளிப்படையாக பேசுவது பல தம்பதிகளின் வாழ்வில் புயலை கிளப்பி உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் ரகசியம் காக்காமல் பகிர்ந்து கொள்வது வீண் விவகாரங்களை வளர்த்து விவாகரத்துவரை கொண்டுபோய் விட்டிருக்கிறது. திருமணத்திற்கு முன்பும், பின்பும் பேசக்கூடாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன!
திருமணம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும், இன்பத்தை வாரி வழங்கும் என்றே ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். கணவருடன் ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும், கணவருக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று நினைக்கும் பெண்கள் ஏராளம். திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் ரகசியம் காக்காமல் கூறிவிட நினைப்பது பலரின் இயல்பு. தப்புத் தண்டா எதுவும் செய்யவில்லையே என்ற மனப்பாங்குடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவர்களின் நினைப்பு.
திருமணத்திற்கு முன்பு தப்புத் தண்டா நடந்திருந்தால்தான் பிரச்சினை உருவாகும் என்பதில்லை. நீங்கள் கூறும் சின்னச்சின்ன விஷயங்கள்கூட கணவரின் மனதில் சந்தேகத்தையும், தவறான எண்ணத்தையும் வளர வைத்துவிடும். திருமணத்திற்கு முன் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதால், அதுவே விபரீதமாக மாறிய நிகழ்வுகள் அனேகம். பல திருமண பந்தங்களை அது முடித்து வைத்திருக்கிறது. சமீபகாலமாக நடக்கும் பல விவாகரத்துகளுக்கு கடந்தகால வாழ்க்கை காரணமாக கூறப்பட்டு உள்ளது.
கடந்த கால நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கும் நினைவுகளாக மனதில் இருந்தால்போதும். வீண் பிரச்சினைகளை வரவழைக்கும் கடந்த கால நிகழ்வுகளை ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது கடந்தகால நினைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். அதுதான் சரியான முடிவு. கடந்ததை நினைத்து இருப்பதை அழித்துக் கொள்வது அறிவுள்ள செயல் அல்ல.
திருமண கவுன்சலிங் கொடுப்பவர்களிடம் பேச வரும் ஆண்கள் பலர், ‘என் மனைவி நல்லவள் அல்ல. அதனால் நான் அவளை விட்டு விலகுகிறேன்’ என்று காரணம் சொல்கிறார்கள். திருமண உறவில் அடியெடுத்து வைத்த பின் மனைவி அந்த பந்தத்தை மதித்து நடந்து கொள்கிறாரா? என்று பார்க்கும் ஆண்கள் குறைவு தான். அப்படியிருக்கும்போது அவசியமற்ற கடந்த கால நிகழ்வுகளை ஏன் கணவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
வாழ்க்கை என்பது நாம் தீர்மானிப்பதைப் போல அவ்வளவு எளிமையானதல்ல. பல திருப்பங்களைக் கொண்டது. எந்த திருப்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. முடிந்து போன ஒரு விஷயத்தை தோண்டி எடுப்பது அருவருப்பானது. எதிர்கால வாழ்க்கையை அது பாதிக்கும்.
திருமண வாழ்க்கை என்பது சமூக அந்தஸ்தைப் பெற்றுத் தரக் கூடியது. அதில் ஒருமுறை சமூகத்தின் பார்வையிலிருந்து விலகி வந்துவிட்டால் மீண்டும் அதே இடம் நமக்கு கிடைப்பது அரிது. விவாகரத்து செய்வது, மறுமணம் செய்வது, தனிமையில் கழிப்பது என வாழ்க்கையை சுமையாக்கிக் கொள்வதைவிட, தேவையற்ற கடந்த கால நிகழ்வுகளை பேசாமல் இருப்பதே சிறந்தது. கணவர் சில விஷயங்களை ஏற்றுக் கொண்டால்கூட, சுற்றியிருக்கும் சிலர் உங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சி செய்யலாம். அதற்கு இடமளிக்காதீர்கள்.
திருமண வாழ்க்கை உங்களுக்கு ஒரு புதிய குடும்பத்தை ஏற் படுத்திக்கொடுக்கும். பல புதிய உறவுகளைத் தந்து வாழ்நாள் வரை துணைக்கு வரும். எனவே பழைய வாழ்க்கையைவிட திருமண பந்தத்திற்கே முதலிடம் தரப்பட வேண்டும். எதிர்காலத்தை நோக்கியே வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
கணவனின் கடந்த காலத்தைப் பற்றி மனைவி பெரிதாக சிந்திப்ப தில்லை. மனைவியின் கடந்தகாலம் கணவனுக்கு அவ்வப்போது வம்புக்கு இழுக்க வசதியாக அமைந்துவிடுகிறது. பெண்களின் பழைய வாழ்க்கை ஆண்களின் ‘சைக்கோ’ தன்மையை தூண்டிவிடுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் இதை அனுமதிக்கக்கூடாது. திருமண வாழ்க்கையின் நிம்மதியை இதுபோன்ற செயல்கள் குறைத்துவிடும்.
தேவையற்ற விஷயங்களை பேசி மனைவியை பலவீனப்படுத்துவது ஆண்களின் குறுகிய சிந்தனையைத்தான் காட்டும். இதனால் விளையப் போகும் பலன்களை எண்ணிப் பார்க்காமல் அவர்கள் பிரச்சினையை வளர்ப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. விலகிப்போவதால் அவரது இடத்துக்கு இன்னொருவர் வருவார். அவருக்கும் பழைய வாழ்க்கை ஒன்று இருக்கும். அப்படியிருக்க பழையதை தோண்டி வாழ்க்கையை பாழுங்குழியில் தள்ள வேண்டுமா என்ன? திருமணத்திற்கு பிந்தைய வாழ்வில், மனைவி எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையே ஆண்கள் கவனிக்க வேண்டும்.
பல பெண்கள் கண்ணீரோடு சொல்லும் புகார், “என்னைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்பு கணவர், கடந்தகால கசப்பான விஷயங்களை சொல்லிக்காட்டி என்னை துன்புறுத்துகிறார்” என்று வேதனைப்படுகிறார்கள். அதில் பெண்களின் தவறும் சரிபாதி இருக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கை என்பது நல்ல விஷயங்கள் மட்டும் நடக்கும் களம் அல்ல. நன்மை-தீமை இரண்டும் விளையக்கூடிய பூமி. இதில் சில களைகள் நாம் விதைக்காமலே முளைக்கக்கூடும். அவைகளை களையெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியை வளர்க்க முடியும். கடந்த காலம் என்பது இனிமையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது முடிந்துபோன ஒன்றுதான். ஆனால் நிகழ்காலம் என்பது மிக முக்கியமானது. அதை மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகள், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் பாதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடக்கூடாது.
பழைய விஷயங்களை பேசுவதில் மறுமணம் செய்து கொண்டவர்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மறுமண வாழ்க்கையில் பரந்த மனம் இருக்க வேண்டும். கடந்தகால நெருடல்கள் இருக்கக் கூடாது. அதுபற்றி தம்பதிகள் அவசியமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடாது. இனி இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு பழையதை தோண்டக்கூடாது. புது வாழ்வை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். இதில் பல ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மனைவியைப் பற்றி பலர் முன் பேசுவது, இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், வாழ்க்கையில் ஏதோ தியாகம் செய்துவிட்டதைப் போல நடந்து கொள்வது, குடும்ப ரகசியங்களை பலர் முன் போட்டு உடைப்பது இப்படிப்பட்ட நடத்தைகள் உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். உங்கள் வாழ்க்கையை பலரும் பேசும் விஷயமாக்காதீர்கள். பழையதைப் பேசி இனிய வாழ்வை விஷமாக்கிக் கொள்ளாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில். அதை நாம்தான் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.