விவாகரத்து: அதிக பாதிப்பு ஆண்களுக்கா? பெண்களுக்கா?
20 கார்த்திகை 2017 திங்கள் 09:13 | பார்வைகள் : 8667
விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படுவார்கள். அத்தகைய பெண்கள் மீது அனுதாபமும் கொள்வார்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை.
விவாகரத்தில் ஒரு பெண் பாதிக்கப்படுவது போன்று ஒரு ஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோகத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்தனை, நிம்மதி இழப்பு போன்றவை ஆண்களுக்கும் உண்டு.
குடும்பம் என்றதும் அன்பு, கடமை, பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொருத்தமானவர்கள் என்று கருது கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்- பெண் இருபாலருக்கும் பொருத்தமானவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனு சரணை போன்றவை கிடைக்கும்.
விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவித இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டிக் கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணரவைப்பதற்காக பிரிந்துசெல்ல விரும்புகிறார்கள்.
பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏன்என்றால், சுய சம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத் திலும் பெண்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடி வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மென்றுவைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பார்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கிவருவார்கள்.
ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும் கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவாகரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.
என்ன தான் பெண்களுக்கு கல்வியறிவும், சுய சம்பாத்தியமும் இருந்தாலும் பெண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்றபடி மனநிலையைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை, நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்களின் சந்தேகப் பார்வை போன்றவைகளை எல்லாம் விவாகரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறையாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கிவிடுவார்கள். விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலையவைத்துவிடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை தரவேண்டி இருக்கும். இதற்காக அசையா சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பண அழுத்தமும் சேர்ந்துகொண்டு அவர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடிவை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்துவிடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகிவிடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.
இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சி யிலிருந்து அவர்கள் மீள வெகுநாட்களாகும். அதன் தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையையும் பாதிக் கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டி யிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.