Paristamil Navigation Paristamil advert login

முத்தம் காதலை வளர்க்குமா?

முத்தம் காதலை வளர்க்குமா?

10 ஐப்பசி 2017 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 8894


 காதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 
பார்த்ததும் காதல் வருமா?
 
“பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான் என்கிறது ஆய்வு. காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிட குறைவான நேரமே போதுமாம். தனக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான நபரைப் பார்க்கும், அரை வினாடிக்குள்ளாகவே மூளையில் காதலைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்துவிடுவதாகச் சொல்கிறது ஆய்வு.
 
அந்த சில வினாடிகளில் மூளையில் நிகழும் மாற்றங்களை படம் பிடித்துப் பார்த்தபோது, மூளையின் 12 இடங்களில் காதல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது அறியப்பட்டது. அன்புக்குரிய அல்லது ஈர்ப்புக்குரியவரை காணும்போது நரம்புக் கடத்திகளுக்கு புது ஊக்கம் கிடைக்கிறது. ஆக்சிடோசின், டோபமைன், வாசோபிரெசின் மற்றும் அட்ரினலின் போன்ற ரசாயன திரவங்கள் சுரந்து உடல் முழுவதும் பரவசம் கலந்த உணர்வை பரவச் செய்து சிலிர்க்கச் செய்கிறது. ஏறத்தாழ மெய்மறந்த நிலைக்கு தள்ளுகிறது இந்த மாற்றங்கள். ஒப்பிட்டுச் சொல்வதானால் தேன் உண்ட வண்டின் நிலையும், பறப்பதைப்போல உணரும் போதையும் முதல் பார்வை மோதலால் ஏற்படுகிறது.
 
காதலுக்கும், செக்ஸுக்கும் என்ன வித்தியாசம்?
 
காதலுக்கும், செக்ஸ் ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது மற்றொரு ஆய்வு. செக்ஸ் உணர்வுகளின்போது ஏற்படும் நரம்பு செயல்பாடுகளையும், காதல் உணர்வின்போது ஏற்படும் நரம்பு செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர் விஞ்ஞானிகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் கொண்ட வேறுபாடுகள் பல கண்டு பிடிக்கப்பட்டன.
 
உணர்ச்சி, ஊக்கம், எண்ண அலைமோதல்களில் காதலுக்கும், செக்சிற்கும் பல இடங்களில் மாறுபாடு காணப்படுகிறது. காதல் உணர்வின்போதும், செக்ஸ் உணர்வின்போதும் மூளை செயல் பாடுகள் விறுவிறுப்படைகின்றன என்பது மட்டுமே ஒற்றுமையான தகவலாகும்.
 
 
 
செக்சைவிட காதல் ஒரு அடிப்படை உணர்வாக இருப்பதும், இலக்கு நோக்கிய ஊக்கம் மற்றும் சிறப்பான எண்ண ஓட்டங்களுக்கு காதல் துணை புரிவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் பெரும்பாலான இயக்கத்தை காதல் தூண்டுவதும், செக்ஸ் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் எழுச்சியை உருவாக்குவதும் தெரிய வந்தது. ஆக காதல் உணர்ச்சியால் பெறும் பரவசமும், செக்ஸ் உணர்வால் ஏற்படும் கிளர்ச்சியும் வேறு வேறு என்பது இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
 
விலகியிருப்பது விரிசலை ஏற்படுத்தாது?
 
சில நேரங்களில் காதலர்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். வேலை காரணமாகவோ அல்லது வேறுவிதமான நெருக்கடிகள், சந்தர்ப்பங்களாலோ ஏற்படும் தூர இடைவெளி அவர்களின் காதலை பாதிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அப்போதுதான் காதலர்கள் நெருக்கமான விஷயங்களை அதிகம் பகிர்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடைவெளியில்தான் தங்கள் துணையின் தீர்க்கமான அன்பும், சிறப்பும் தெரியவருவதாகவும் காதலர்கள் கருத்துக் கூறி உள்ளனர். இதிலிருந்து இடைவெளி காதலை வளர்க்குமே தவிர, பிரிவைத் தராது என்பது தெளிவாகிறது.
 
காதலை பிரிப்பது எது?
 
உளவியலாளர் ஜான் காட்மேன், 40 ஆண்டுகளுக்கும் மேலாக காதலர்களை, தம்பதியர்களை ஆராய்ந்து அவர்களின் உறவு மற்றும் பிரிவிற்கான காரணங்களை விளக்கி உள்ளார். அதில் முக்கியமான 4 விஷயங்கள் காதலை அடியோடு வீழ்த்திவிடுகிறது என்பது தெரியவந்துள்ளது.
 
எப்போதுமே மட்டம் தட்டி பேசுவது, தற்காத்துக் கொள்ளும் விதமாக மற்றவர் மீது பழி சுமத்துவது, பிரச்சினைகளை களை யாமல் பெரிதாக்குதல், தலைக்கனத்துடன் சம உரிமை கொடுக்க மறுப்பது போன்ற காரணங்களால் காதலும், உறவு முறிவுகளும் ஏற்படுகின்றன என்கிறார் காட்மேன்.
 
 
 
காதல் எப்போது முழுமை பெறும்?
 
திருமணங்களே காதலை முழுமைப்படுத்துவதாகவும் ஆராய்ச்சி கூறுகிறது. திருமணம் ஒரு பந்தத்தை முற்றிலும் முழுமையாக்குவதாகவும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். திருமணம் இருவரின் அன்பையும், வாழ்வையும் தன்னிறைவுப்படுத்துகிறது. குழந்தைகளும் பிறந்துவிட்டால் இணக்கம் மேலும் அதிகரிக்குமாம்.
 
காதலை வளர்க்கும் சின்னச்சின்ன விஷயங்கள்
 
சின்னச் சின்ன விஷயங்கள் காதலை வளர்க்கும். ஆனால் அந்த சின்ன விஷயங்களை, சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு உதாசீனப்படுத்தி வந்தால் அவை காதலை கவிழ்த்துவிடும். உதாரணமாக உங்கள் அன்புக்குரியவர் நீங்கள் இருக்கும் இடத்திற்கே அன்புடன் காபி கோப்பையை கொண்டு வந்து தரலாம். பதிலுக்கு நீங்கள் அவருக்கு காபி கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் காபி கோப்பையை அவரே திரும்ப கொண்டு போய் கழுவிவைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் அன்பையும், பண்பையும் காட்டும்போது அவை காதலர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. 
 
காதல் ஆராய்ச்சிகளை அறிந்து கொண்டு, உங்கள் காதலை மேம்படுத்தினால் நல்லது! 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்