Paristamil Navigation Paristamil advert login

இதயத்தின் வலிமை

இதயத்தின் வலிமை

26 புரட்டாசி 2017 செவ்வாய் 18:46 | பார்வைகள் : 9585


 எமது வாழ்வில் பல முறை நாம் பலர் கூறக் கேட்டிருப்போம் “உனது இதயத்தை கேட்டு எந்த முடிவையும் எடு” என்று. அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்து அவர் இதயம் அற்றவராக நடந்து கொள்கின்றார் என்று. அதே போல அன்பை வெளிப்படுத்தவோ, அல்லது காதலைக் குறிக்கவோ இதயத்தை படமாக வரைந்து காட்டுவதையும் காண்கின்றோம்.

 
இதயம் எமது உடலுறுப்புக்களுக்கு இரத்தத்தை வழங்கும் ஒரு உறுப்பாக தொழிற்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட இதயத்தை அன்போடு இணைத்து பேசப்படுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா? எமது வாழ்க்கையைப்பற்றிய நல்ல முடிவுகள் எடுப்பதற்கு இதயம் எவ்வாறு பங்கு வகிக்கின்றது என்பதைப்பற்றி பார்ப்போம். இதயம் எமது உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் ஓர் உறுப்பாக விளங்குகின்றது என ஆராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நாம் எந்த வகையான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மருத்துவரிடம் சென்றாலும் அவர் எமது இதயத்துடிப்பை பரிசோதனை செய்து பார்ப்பதை காண முடியும்.
 
அமெரிக்காவில் உள்ள heart math என்னும் ஒரு ஆராய்ச்சிக் குழு இதயத்துக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை பல ஆராய்ச்சிகளின் மூலம் வெளிக் கொணர்ந்து இருக்கின்றார்கள். அந்த ஆய்வுகளின் படி நாம் அன்பு, கருணை, இரக்கம், நன்றி உணர்வு போன்ற நேர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கும் போது எமது இதயத்துடிப்பு சீரான (rhythm) முறையில் இருப்பதாகவும், கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறையான உணர்வுகளின் போது இதயத்துடிப்பு சமநிலை தவறி சீரற்றதாக இருப்பதாகவும் அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
 
நல்ல உணர்வுகள் உடலில் உருவாகும் போது உடலுக்கு தேவையான நன்மை தரும் சுரப்பிகள் இயங்கி நல்ல சுரப்புகள் சுரக்கின்றன. இதனால் DHA (docosahexaenoic acid) என்னும் சுரப்பி அதிகமாக சுரக்கிறது. இது எமது உடல் கலங்களை புதுப்பிப்பதற்கு உதவுகின்றது. இந்தச்சுரப்பி எமது நரம்புமண்டலத்தை ஓய்வாக வைத்திருக்க உதவுகின்றது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அது போல் எதிர்மறை உணர்வுகள் உடலில் அட்ரீனல், கோர்டிசோல் (adrenaline, cortisol) போன்ற தீமை தரும் சுரப்பிகளை சுரக்க வைக்கின்றன என்பதும் அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. இது எமது இதயத்தின் துடிப்பை விரைவு படுத்துவதால் பல எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி எமது உடலின் சமநிலையை சீர்குலைக்கின்றது. ஒருவர் மன அழுத்தமுள்ள உணர்வுகளான பயம், கோபம் போன்றவற்றை உணரும் போது இதயத்தின் உணர்வுகளான அன்பு, அமைதி என்பன அவரிடம் இல்லாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் அவர் எடுக்கும் எந்த முடிவுகளும் சரியாக அமைவதில்லை என்பதும் இந்த ஆராய்ச்சிகளில் உறுதியாகின்றது.
 
பல மனிதர்களும் எமது மூளை தான் உடல் உறுப்புக்களை இயக்குகின்றது என்று நம்புகின்றார்கள். உண்மையில் ஒரு குழந்தை உருவாகும் போது இதயமே முதலில் உருவாகின்றது என்றும் இதயத்தில் மூளைக்கான ஒரு பகுதி இருக்கின்றதென்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இதயம் மூளையின் தொடர்பின்றி ஆரம்பத்தில் தனியாக இயங்குவதும் மூளைக்கும் இதயத்துக்கும் இருபக்கங்களிலும் தொடர்பு கொள்ளும் ஆற்றல் (two way communication) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் john & beatrice lacey எனும் குழுவின் ஆராய்ச்சியின் படி இதயத்திலிருந்து செல்லும் அனைத்து தகவல்களும் மூளையால் ஏற்கப்படுகின்றன என்றும் மூளையிலிருந்து வரும் எல்லா தகவல்களும் இதயத்தால் ஏற்கப்படுவதில்லை எனவும் சிலவற்றை மட்டுமே இதயம் ஏற்கின்றது என்றும் அறியக்கூடியதாக உள்ளது. மனம் என்பது மூளை மாத்திரம் அல்ல அது எமது அனுபவங்களை உணரக்கூடிய தன்மையும் எங்களுடைய எண்ணங்களுக்கும் காரணமாக இருக்குறது.அதனால்தான் எமது இதயம் எப்பொழுதும் நல்ல முடிவுகளை எடுக்கும் இடமாகவும், மனம் எதிர்மறை உணர்வுகள் உருவாகுவதற்கு காரணமாகவும் அமைகின்றது. மனம் எப்பொழுதுமே பழைய நினைவுகளில் இருந்து புதிய முடிவுகளை எடுப்பதால் அவை எமக்கு ஏற்றதாக அமைவது இல்லை எனவும் தெரிகின்றது. எமது இதயத்தின் உணர்வுகளை உள்ளுணர்வு (intuition) என கூறுவார்கள். நீங்கள் ஒரு பிரச்சினையில் இருக்கும் போது அல்லது வாழ்வின் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும் தருணத்தில் இதை உணரந்திருப்பீர்கள். பெரும்பாலும் மனிதர்கள் இந்த உள்ளுணர்வை அடிவயிற்றில் ஏற்படும் ஒரு வகையான உணர்வாக (cut feeling) அல்லது இதயத்தில் தோன்றும் உணர்வாக கொண்டிருப்பார்கள். இந்த உள்ளுணர்வை எம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். இதனை எமது வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுத்தலாம். இதை எப்படி வளர்ப்பது? எப்படி இவற்றை பயன்படுத்துவது என்பதை பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம்.
 
- திருமதி ஞானா உருத்திரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்