Paristamil Navigation Paristamil advert login

இதயபூர்வமாக வாழ்தல்

இதயபூர்வமாக வாழ்தல்

3 ஆவணி 2017 வியாழன் 13:22 | பார்வைகள் : 9082


 எமது நம்பிக்கைகளே எமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எமது மனம் எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும். அது கடந்த நினைவுகளை மீளவும் அசைபோட்டுக்கொண்டே இருக்கும். 

 
சிலர் என்னிடம் கூறுவார்கள் அவர்களுடைய சிறுவயதில் நடந்த சம்பவங்கள் கூட அவர்களுக்கு நினைவில் இருக்கும் என்று. அவற்றில் கூட அதிக பாதிப்பை ஏற்படுத்திய விடயங்கள் அதிகமாகவும் பாதிப்பு குறைந்தவை குறைவாகவும் நினைவில் நிற்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் என்றால் சிலவேளைகளில் நினைவில் வரும். அதிலும் நாம் எம்மைப்பற்றி ஒரு கருத்தை உருவாக்கிவிட்டிருந்தோமானால் அதைச்சுற்றி நாம் ஒரு சக்தியை கொடுத்துக்கொண்டிருப்போம். 
 
உதாரணமாக நான் இப்படிப்பட்டவன் அல்லது இந்த இயல்புள்ளவன் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டோமானால் அது இன்னும் பலம் பெற்றுக் கொண்டேயிருக்கும். ஆனாலும் என்னால் மாறமுடியும் என்ற எண்ணத்தை நாம் அதற்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் மற்வர்களிடத்திலிருந்து மாறுபடுகின்றனர். ஆனாலும் நாம் நம்புவது எமக்கு உண்மையாகிறது. அப்படி எம்மைப்பற்றி நாம் நம்புவதை எமது மூளை அப்படியே ஏற்றுக்கொள்ளும். சிலருக்கு மற்றவர்களுடன் பேசிவிட்டு வந்தால் கூட அந்த நினைவுகள் மீண்டும் வரும். மற்றவர்களுடைய எண்ணங்கள், செயல்கள் எம்மை அவ்வாறு பாதித்திருக்கும். 
 
சிறுவயது முதலே நாம் ஒரு வகையான நம்பிக்கையை கற்றுக்கொண்டிருப்போம். அது மற்றவர்கள் எம்முடன் நன்றாக பேசும் பொழுது அல்லது ஏதாவது உதவிகளை செய்யும் பொழுது அவர்கள் நல்லவர்கள் என்றும் அப்படி இல்லாத பொழுது கெட்டவர்கள் என்றும் எண்ணுவதாகும். இப்படி நாம் வளர்க்கப்பட்டிருப்பதால் எமக்கு நன்மை செய்பவர்களை பற்றி நாம் அவர்கள் நல்லவர்கள் என்ற புரிதலில் நேர்மறையான உணர்வுகளை உருவாக்குவோம். ஆனால் கெடுதல் செய்பவர்களை பற்றி எதிர்மறையான கோபம், ஆத்திரம் போன்ற உணர்வுகளை கொண்டிருப்போம். 
 
ஆன்மீக பெரியவர்கள் கூறியிருக்கின்றார்கள் ஒருவர் எமக்கு ஏதாவது துன்பம் தருகின்றாரெனில் அவர் எமக்கு ஒரு ஆசிரியராகின்றார் என்று. ஏனெனில் நாம் அவரிடமிருந்து ஏதோ ஒன்றை அறிகின்றோம். அது எமது பலவீனத்தை பற்றியதாகவோ அல்லது எவ்வாறாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவருடனான உரையாடலின் போது அவர் எம்மை பற்றி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை முன்வைத்தாரெனில் நாம் அதைப்பற்றி கோபப்படாமல் மனம் புண்படாமல் அவர் குறிப்பிட்ட அந்த விடயம் எம்மிடமிருக்கின்றதா என்பதையும் பார்க்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் அப்படியான பலவீனங்கள் எம்மிடமிருப்பதுண்டு. ஆக நல்ல சம்பவங்களை போலவே துன்பமான சம்பவங்களும் எமக்கு உதவியே செய்கின்றது. 
 
எம்மை நாம் உணர்ந்து கொள்ளவும் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்லவும் இது உதவியாகின்றது. வாழ்க்கை என்பதே எம்மை நாம் உணர்ந்து எம்மைப்பற்றி அறிந்து வளர்ச்சியை நோக்கி முன்னேறிச்செல்லுதல் ஆகும். எமது வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளிலும் நாம் பல மனிதர்களை சந்திப்போம். அவர்களிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்வோம். எமது முன்னய பிறவிகளிலும் இப்பொழுதும் இந்தப் படிப்பினைகளை கற்றுக்கொள்கின்றோம். இந்த கற்றலின் போது சிலவேளைகளில் எமது சக்தி அதிகரிக்கும் அல்லது குறையும். அப்படி குறையும் போது நாம் அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். ஏனெனில் பிறப்பின் நோக்கமே நாம் யாரென்பதை அறிந்து கொள்வதும், எப்படி எமது மனம், புத்தி என்பன இயங்குகின்றது? அதற்கும் எமது ஆன்மாவிற்குமான தொடர்பு என்ன? இந்த உலகத்தில் எனது நோக்கம் என்ன என்பதை அறிவதாகும். 
 
தன்னை உணர்ந்தவர் ஞானி என அழைக்கப்படுகின்றார். தன்னை உணர்வது என்பது முதலில் அவருடைய கவனத்தை தன்னை நோக்கி திருப்புவது ஆகும். அப்படி தன்னைத்தானே ஆழ்ந்து கவனிக்கும் போது அவருடைய எண்ணங்கள், நம்பிக்கைகள் மட்டுமல்லாமல் அவருடைய வாழ்க்கை முழுவதிலும் சேகரித்துக் கொண்ட நல்ல விடயங்கள் மற்றும் கசப்பான துன்பமான அநுபவங்கள் அனைத்தும் அவருக்கு எதையாவது கற்றுக் கொடுத்திருப்பதை அறிய முடியும். எந்தவொரு அநுபவமும் அது நல்லதோ அல்லது கசப்பானதோ அவை கெட்டவை அல்ல. அவற்றிலிருந்து நாம் எதை கற்றுக் கொண்டோம் என்பதை உணர்ந்தோமானால் அந்த சம்பவம் மீண்டும் நமக்கு ஏற்படுவதில்லை. ஆனால் எதையும் உணரவோ அல்லது கற்கவோ இல்லையெனில் அதே சம்பவம் பல வழிகளில் வேறு வேறு ஆட்கள் மூலம் அவை மீண்டும் மீண்டும் எமக்கு நிகழ்வதை எம்மால் காணமுடியும். ஏனெனில் அந்த நிகழ்வால் ஏற்பட்ட சக்தியும் அது சார்ந்த எமது நம்பிக்கைகளும் எம்மைவிட்டு அகல வேண்டும். சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடும் போது அந்த உரையாடலின் முடிவில் அதைப்பற்றி எதையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அதை அந்த இடத்திலேயே விட்டு விடுவார்கள். நான் ஒருவருடன் பேசும் பொழுது அவர் குறிப்பிட்டார் “நான் மற்றவர்கள் கூறியதை ஒரு போதும் நினைவில் வைத்திருப்பதில்லை. ஏனெனில் அது தொடர்பாக என்னால் எதையும் செய்ய முடியாத போது எதற்காக அதை நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்று. அது அவர் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. அவர் தனது மனதை அப்படி பழக்கப்படுத்தி இருக்கின்றார். அவருடைய அந்த நம்பிக்கைக்கேற்ப அவரது மூளை இயங்குகின்றது. எமது நம்பிக்கைகளை மாற்றும் போது எமது மூளையும் அதற்கேற்ப மாறும். சில மனிதர்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கும் இயல்புள்ளவர்களாக இருப்பார்கள்.  அல்லது நல்லவற்றை மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள். இவை எல்லாமே ஒன்றுதான் நல்லதை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் என்பதும் எமக்கு கற்பிக்கப்பட்ட ஒன்றே. 
 
மனதின் பிடியில் இயங்குபவர்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பதையும் இதயபூர்வமாக இயங்குபவர்கள் அவற்றை இலகுவாக வெளியேற்றுவதையும் நாம் நன்றாக கவனித்தோமானால் பார்க்க முடியும். ஏனெனில் இதயத்திலிருந்துதான் எமது உண்மையான ஆன்மீக சக்தி இயங்குகின்றது. நாம் இதயத்துடன் இணைந்து இருப்போமானால் மூளை எதைப்பற்றியும் எமது இதயத்திடம் கேட்கின்றது. மனதின்படி செயற்பட்டால் எமது வலது பக்க மூளை அதிகமாக இயங்கும். இதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்கும் போது இடது பக்க மூளை அதிகமாக வேலை செய்யும். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் எதையும் மன்னிப்பது, மறப்பது, ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்றன அதிகமாகின்றது. இப்படி இதயத்தோடு தொடர்பு கொள்ளும் போது மனதின் பலவீனமான எதையும் மீண்டும் மீண்டும் எண்ணுவது, கட்டுப்பாடற்ற சிந்தனை என்பன குறைந்துவிடும். உண்மையான ஞானம் பெற்றவர்கள் இதயபூர்வமாகவே இருப்பார்கள். சாதாரண மனிதர்களை போல சதா எண்ண ஓட்டத்தில் சிக்கியிருக்க மாட்டார்கள். அவர்கள் எண்ணங்கள் அற்றிருப்பார்கள். தேவைப்பட்டால் மட்டுமே எண்ணங்களை உருவாக்குவார்கள். அவர்கள் முழுமையாக தங்களை உணர்ந்து தமது இதயத்தின் சக்தியை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வார்கள். அவர்களையே நாம் ஞானிகள் என்கின்றோம். இதுவே எமது வாழ்வின் நோக்கம். இவ்வாறு நாம் வாழ்வோமானால் எமது வாழ்க்கை இலகுவானதாக அமையும். 
 
ஒவ்வொருநாளும் காலையில் எமது நாளை ஆரம்பிக்கும் போது மனதை இதயத்தை நோக்கி கொண்டு செல்லவேண்டும். அத்தோடு எமது மூச்சை இதயத்தை நோக்கி செலுத்த வேண்டும். இவ்வாறே ஒரு பத்து முறை செய்யுங்கள். அப்பொழுது இதயத்தை நோக்கி எமது சக்தி செல்வதாக எண்ண வேண்டும். அப்பொழுது எமது பிரக்ஞை மனதை விட்டு விலகி இதயத்தை சுற்றியே இருக்கும். நாம் இதயத்திலிருந்து எமது நாளை ஆரம்பித்தோமானால் அந்த நாள் இனிமையானதாக அமையும். ஒவ்வொரு நாளும் இனிமையானதாக அமையட்டும். 
 
இதய தியானம்
 
பல வகையான தியானமுறைகள் உலகெங்கும் பின்பற்றப்படுகின்றது என்றாலும் அவற்றுள் இதயத்தை நோக்கி செய்யப்படும் தியானம் மிகவும் சிறப்பானதாக உள்ளது. ஏனெனில் இதயம் மூலமாகத்தான் நாம் எமது உண்மையான ஆத்மாவை தொடர்பு கொள்ள முடியும். அதனால்தான் இதயத்தை நோக்கி செய்யப்படும் தியானம் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. இதயம் எமது உடலின் நடுப்பகுதியில் இருக்கின்றது. ஒரு மனித உடல் உருவாகும் போது முதலில் உருவாகும் உறுப்பு இதயம் ஆகும். இதயத்தின் ஒரு பகுதி மூளைக் கலங்களை கொண்டிருப்பதுடன் அவை இதயத்தின் இயக்கத்தையும், உடலின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் நவீன ஆராய்ச்சிகளின் படி அறியவருகின்றது. இதயத்திலிருந்து அனுப்பப்படும் செய்திகளை மூளை ஏற்றுக்கொள்கின்றது எனவும் மூளையிலிருந்து அனுப்பப்படும் செய்திகள் அனைத்தையும் இதயம் ஏற்றுக்கொள்வதில்லை (சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றது) எனவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில் இதயமே உடலை ஆளுகின்றது என கூறலாம். ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருடைய இதயத்துடிப்பையே மருத்துவர்கள் பரிசோதிக்கின்றார்கள். உடலில் எந்தப்பகுதியில் ஒரு நோய் அல்லது பிரச்சினை ஏற்பட்டாலும் அது இதயத்தில் பிரதிபலிக்கும்.  
 
இப்படிப்பட்ட இதயத்தை நாம் சரியான முறையில் வைத்திருக்க வேண்டுமென்றால் எமது உணர்வுகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். மூளையின் சக்தி குறைவாக இருக்கும் போது இதயத்தின் சமநிலை அதிகமாகும். இதயத்தின் சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் நாம் அதை கவனித்து தியானம் செய்யலாம். எம்மால் காணக்கூடிய இதயம் உடல்ரீதியான ஒரு உறுப்பே. அது உடலுக்கு தேவையான இரத்தச் சுற்றோட்டத்தை மேற்கொள்கின்றது போன்ற பௌதீக விடயங்களே இதயம் தொடர்பாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அதற்குள்ளே பல சக்திகள் இருக்கின்றது. எம்மை இந்த உலகத்துடனும் கடவுளின் உலகத்துடனும் இணைக்கும் ஒரு பாலமாக இதயம் விளங்குகிறது.  
 
இதயத்தில் பல ஒளிகள் (lights) உண்டு. தியானம் மூலம் அந்த ஒளிகளை எம்மால் தொடர்பு கொள்ள முடியும். அந்த ஓளிகள் மூலம் எமது உண்மையான சக்திக்குள் அல்லது எமது ஆன்மாவிற்குள் நாம் செல்லமுடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் எமது உடலில் இதயத்தின் கட்டுப்பாடு ஏற்படுவதால் எமது மூளை சார்ந்த மனம் (mind)  அமைதியடைகின்றது. இந்த வகையான தியானங்கள் இதற்கு உறுதுணையாகின்றன. அதை எப்படிச்செய்வது என பார்ப்போம்.  
 
முதலில் இதயத்தை நோக்கி மூச்சை நன்றாக எடுத்து அமைதியான முறையில் வெளிவிட வேண்டும். சிறிது நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான மனநிலையோடு நன்றி சொல்லவேண்டும். நன்றி என்பது இதயத்தோடு தொடர்பு பட்ட ஒரு நல்லுணர்ச்சி ஆகும். (நன்றி மட்டுமல்லாமல் அன்பு, கருணை, சுயஇரக்கம் போன்றவையும் இதயத்தோடு தொடர்புபட்டதாகும். இந்த உணர்வுகளை நாம் உணர்வதன் மூலம் நாம் இதயத்தோடு இணைந்திருக்க முடியும். அப்படிப்பட்ட உணர்வுகளின் போது எமது இதயத்துடிப்பு சீராக இருக்கும்). நீங்கள் ஏதாவது மூன்று விடயங்களுக்கு நன்றி செலுத்தலாம். இப்பொழுது நீங்கள் இதயத்துடன் இணைந்து விட்டிருப்பீர்கள். அதன் பின்னர் உங்கள் வாழ்கையில் எது நிகழவேண்டும் அல்லது எதையாவது பெறவேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மனதில் எண்ணுங்கள். நாம் நன்றியுணர்வுடன் எமது விருப்பத்தை இணைத்து தியானிக்கும் போது அந்த விருப்பம் எம்மை வேகமாக வந்தடையும். ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறு தியானித்தால் எமது இதயம் மேலும் திறக்கப்படும். நாம் எதைப்பற்றியாவது வைத்திருக்கும் கோபம், பயம், கவலை போன்றன ஒரு தடையாக இதயத்தை சூழ்ந்து இருக்கும். இவற்றை நாம் ஒரு சுவர் என கூறுகின்றோம். அவற்றை நாம் நீக்கும் போது இதயம் திறத்தல் என கூறுகின்றோம். அப்பொழுதுதான் நாம் எமது உண்மையான சக்தியை உணரக்கூடியதாக இருக்கும். அதனால்தான் இதயம் சார்ந்த தியானம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 
 
- திருமதி ஞானா உருத்திரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்