நாம் நாமாக வாழுதல்!!!
25 ஆடி 2017 செவ்வாய் 11:07 | பார்வைகள் : 8936
பலருடைய வாழ்க்கை மற்றவர்கள் தங்களை பற்றி என்ன சொல்வார்கள், என்ன நினைப்பார்கள் என்பதை கருத்தாக கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எமது சமூகத்தில் மற்றவர்களின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை முக்கியமாக காணப்படுகிறது. நாம் எமது உறவினர்கள், நண்பர்கள், சமூகம் ஆகியவற்றுடன் ஒத்து வாழவே விரும்புகிறோம். அத்துடன் எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப வாழ்கிறோம். அதனால் நாம் எமக்கு உண்மையாக இருப்பதில்லை. ஆகையால் நாம் ஒரு போலியான சமூகத்தை உருவாக்குகிறோம். எமது ஆரோக்கியமும் இதனால் பாதிப்படைகிறது. எமது தனித்தன்மை வெளியில் வராமல் போகின்றது.
இப்படி எல்லோரைப்போல வாழும் முறை எமக்கு ஒப்பிடும் தன்மையை கொடுக்கிறது. நான் மற்றவர்களை விட சிறப்பானவன் அல்லது குறைவானவன் என்ற எண்ணங்களை உருவாக்குகின்றது. இவை எம்மை சுற்றி பலவிதமான எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகளை உருவாக்குகின்றது. இவை எம்மை பாதிக்கும். இந்த ஒப்பிடும் தன்மை, சமூகத்தில் தன்னை வெளிக்காட்டும் தன்மை, உறவுகள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் இவைகள் பல மனிதர்களிடம் பலவகையில் இருக்கின்றது.
ஆதலால் ஒரு விதமான போலியான உணர்வுகளோடு மனிதர்கள் தமக்கும் மற்றவர்களுக்கும் உண்மை இல்லாமல் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனது வாழ்வும், அநுபவங்களும் தனித்தன்மை வாய்ந்தது. மற்றவர்களின் எதிர்பார்ப்புக்களை எம்மால் ஒருபோதும் பூர்த்தி செய்யமுடியாது. அதுவும் எல்லா மனிதர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வது சாத்தியமே அற்ற விடயம். மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் அதாவது ஒருவர் இல்லாதவிடத்தில் அவரைப்பற்றி பேசுவதென்பது நாம் ஒருவிடயத்தை நேரடியாக கூறவிரும்பாததாலே உருவாகிறது. இப்படியான சக்திகள் எதிர்மறையான உணர்வுகளை உருவாக்குகிறது.
ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கையும் வேறு வேறானவை. நான் இந்த எனர்ஜி ஹீலிங் துறையில் ஆரம்பத்தில் நுழைந்த போது எல்லோரும் என்னை ஒரு வித்தியாசமான எண்ணத்தோடே பார்த்தார்கள். பல நண்பர்கள், உறவினர்கள் கூட பல விமர்சனங்களை செய்திருந்தார்கள். அப்படி ஒரு ஹீலராக செயற்படுவது கூட ஆரம்பத்தில் எனக்கு கடினமாகவே இருந்தது. ஆனாலும் எனது ஆழ்மனதிலுள்ள அந்த உண்மையை நம்பி அதன்படி நடந்தேன். மற்றவர்களுக்கு வித்தியாசமானதாக தெரிந்தாலும் இது என்னுடைய வாழ்க்கையை பலவகையில் சிறப்பானதாக மாற்றியது. அத்தோடு பலமனிதர்களுக்கு வாழ்க்கையில் ஆரோக்கியத்தை கொண்டு வந்தது. நான் மற்றவர்களை போல் இருக்க நினைத்திருந்தால் என்னால் இந்த தொழிலை செய்ய முடியாது. பல மனிதர்களின் வாழ்வு வளம்பெற என்னால் உதவியிருக்க முடியாது.
ஆகவே மனிதர்கள் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எமது உண்மையான வெற்றியான ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படையானதே எமது தனித்தன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்வதாகும். மற்றவர்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அது அவர்களுடைய பிரச்சினை, உங்களுடையதல்ல. உங்களைப்பற்றி அவர்களுக்கு தெரிந்த அளவிற்கான ஒரு கணிப்பு மட்டுமே.
வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் மற்றவர்களை விட அதிக பணத்துடன் வாழ்வதோ அல்லது நல்ல வேலையில் இருப்பதோ அல்ல. எமக்கு சிறுவயதில் இருந்தே இப்படிப்பட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவை ஒரு செல்வ வளமுள்ள வாழ்க்கையை உருவாக்கக் கூடும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை அனைத்தையும் பற்றியது. நாம் எமக்கு உண்மையாக நடந்தாலே அது கிடைக்கும். நாம் எம்மிடம் ஏதாவது வித்தியாசமான தன்மைகள் அல்லது வித்தியாசமான அறிவு போன்றவை இருந்தால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்மால்தான் எமது தனித்தன்மையை உலகிற்கு வெளிக்கொணர முடியும்.
நாம் கூட்டமாக மனிதர்களானாலும் ஒவ்வொருவருடைய தனித்தன்மைகளையும் மதித்து, ஏற்று நடப்போமானால் இந்த உலகமே அன்பு நிறைந்ததாக மாறிவிடும். இங்கு போலிகளுக்கு இடமிருக்காது. என்னிடம் ஹீலிங் செய்ய வரும் சிலர் வெளியில் என்னைப்பற்றி என்னிடம் சேவையைப்பெற்றுக் கொள்வது பற்றி சொல்லவேமாட்டார்கள். ஏனென்றால் மற்றவர்கள் தங்களை குறைபாடுள்ள மனிதர்களாக கருதிவிடுவார்கள் என்ற அச்சம். அவர்கள் கூட மருத்துவமனைக்கு போனால் அனைத்தையும் கூறுவார்கள். அப்படிக்கூறுவதில் மனத்திருப்தியும் அடைவார்கள். மற்றவர்களின் அனுதாபமும் கிடைக்கின்றது. மருத்துவமனை ஒருவகையில் மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம். ஆனாலும் சிலர் என்னிடம் வேலை செய்த பிறகு மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புவார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைத்த பயன்கள் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். ஆக இரண்டு விதமானவர்களும் வாழ்க்கையை வேறு வேறாகப்பார்க்கின்றார்கள். எதையும் மறைக்க வேண்டும் என்று நினைத்தோமானால் நாம் எமக்கு உண்மையாக இல்லை என்றே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் தமது உண்மையை மனம் விட்டு பேசி, கேட்பவர்களும் இது அவர்களுடைய சுயம் என்ற எண்ணத்தோடு நடந்தார்கள் எனில் ஒரு சிறந்த விரிவான உலகத்தை உருவாக்கலாம். எமக்கு உண்மையாக இருப்பது என்பது எம்மை நேசிப்பது, எமது தேவைகளை முதன்மைப்படுத்துவது, . மற்றவர்கள் எம்மிடம் உதவிகோரும் போது எம்மால் முடியாதவிடத்து அதை வெளிப்படையாக கூறுவது என்பவற்றில் தங்கியிருக்கின்றது.
எமது கலாச்சாரத்தில் பெண்கள் தமது குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்திசெய்வதிலே குறிக்கோளாக இருந்து தமது தேவைகளை பின்னுக்கு தள்ளிவைப்பார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நலத்தையும் இழப்பார்கள். எமக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது சுயநலம் ஆகாது. ஒவ்வொருவருடைய தேவையும் நிறைவேறுவது அவர்களுடைய நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது.
நாம் எமது தேவைகளை கவனிப்பது, நிறைவேற்றுவது என்பது எம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாகாது. என்னிடம் சுமி என்ற பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். மூன்று குழந்தைகளின் தாயான அவருக்கு தன்னைத்தானே கவனித்துக்கொள்வதற்கு கூட நேரமின்றி தவித்தார். தன் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதே அரிதானதாக கூறினார். நான் அவருக்கு எப்படி வேலைகளை ஒழுங்கு படுத்துவது, நேரத்தை சேமிப்பது என்பது தொடர்பாக வழிகாட்டினேன். இப்பொழுது அவர் தன்முகத்தை கண்ணாடியில் பார்ப்பதற்கு மட்டுமல்ல உடல்பயிற்சிக்கு கூட தேவையான நேரத்தை கொண்டிருக்கிறார். நேரத்தை உங்களுக்காக ஒதுக்குவது மிகமுக்கியமானது. ஏனென்றால் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்களால் பலர் நன்மை பெறுவார்கள்.
அதுபோலவே ஒருவர் உங்களிடம் உதவிகோரும் போது உங்களால் உதவி செய்யமுடியவில்லையெனினும் முகத்திற்காக முழு விருப்பமின்றி அந்த உதவியை செய்யும் போது அதனால் இருவருக்குமே நன்மை கிடைக்காது. அவரிடம் என்னால் இதைச் செய்யமுடியாது எனகூறுவதன் மூலம் நீங்கள் உங்களுக்கும் அவருக்கும் நன்மை செய்கின்றீர்கள். எப்பொழுதும் நாம் விருப்பமின்றி செய்யும் வேலைக்கு எதிர்மறை சக்தியை கொடுக்கின்றோம். அந்த வேலையும் நன்றாக நடக்காது.
சில நேரங்களில் சிலர் மற்றவர்களிடத்தில் உதவி கேட்கும் போது மற்றவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்பதை உணர மாட்டார்கள். அவர்களைப் போன்றவர்களிடத்திலே காட்டும் மறுப்பு உண்மையில் அவர்கள் வளர்வதற்கு உதவி செய்யும். நேர்மையாக நாம் எதனால் மறுப்புத்தெரிவிக்கின்றோம் என்பதை கூறுவது அவர்களுடைய வளர்ச்சிக்கு இன்னும் கூடுதலாக உதவும். என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் உண்மையாக மறுப்புச்சொல்வதோ அல்லது உண்மைநிலையை விளக்கிச்சொல்வதோ மிகச்சிறந்த பலன்களை வழங்கி இருக்கின்றது. எனக்கு உண்மையாக நான் இருக்கும் போது மற்றவர்களும் அதை உணர்வார்கள்.
எமது இந்த வாழ்க்கையில் நாம் தேடுவது ஆரோக்கியமே. இது எமக்குள்ளிருந்தே (inner being) ஆரம்பிக்க வேண்டுமே தவிர வெளி உலகிலிருந்து ஒரு போதும் கிடைக்காது.
- திருமதி ஞானா உருத்திரன்