Paristamil Navigation Paristamil advert login

தாழ்வு மனப்பாண்மை

தாழ்வு மனப்பாண்மை

21 ஆடி 2017 வெள்ளி 11:49 | பார்வைகள் : 8634


 பொதுவாக தமக்குள்ளே சண்டைபிடிக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளை குறைத்து மதிப்பிடும், அவர்களை அளவுக்கதிகமாக கட்டுப்படுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளுடைய உண்மையான வளர்ச்சியை தடுக்கின்றார்கள். அதனால் அந்தக்குழந்தைகள் தன்னம்பிக்கை அற்றவர்களாக உருவாகின்றார்கள் என பல ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றது. 

 
முதலில் நாம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையே ஊட்ட வேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்களால் அவர்களுடைய சக்திகளை பயன்படுத்தி வளர்ச்சியடைய முடியும். எவ்வாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம் என பார்ப்போம். 
 
அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் அவர்களை எல்லாவற்றிலும் கட்டுப்படுத்தி வைக்கக்கூடாது. அவர்களை வைத்துக்கொண்டு பெற்றோர் தமக்குள்ளே ஒருவரை ஒருவர் குறை சொல்லக்கூடாது. அவர்கள் விடும் தவறுகளை பெரிய விடயமாக்கி விடாமல் அவற்றை அமைதியாக அவர்களுடன் அமர்ந்து அவர்களை பார்த்து நயமாக சுட்டிக்காட்ட வேண்டும். 
 
நாம் எம்மை சமநிலையில் வைத்துக்கொண்டே குழந்தைகளுடன் பேச வேண்டும். நாம் கோபத்துடனோ, பயத்துடனோ இருந்து அவர்களுக்கு ஒன்றைச் சொன்னால் அவர்களும் அந்த உணர்வுக்கு மாறிவிடுவார்கள். அவர்களால் நாம் சொல்லும் விடயங்களை சரிவர கிரகிக்க முடியாது. 
 
பெற்றோர் சமநிலையின்றி கவலையுடனோ கோபத்துடனோ இருந்து கொண்டு அதை மறைத்துக்கொண்டு பிள்ளைகளுடன் ஏதாவது ஒன்றைச் செய்யும் பொழுது உதாரணமாக நாம் கவலையுடன் இருந்து கொண்டு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தருவது போன்றவை கூட அவர்களால் எமது இதயத்தினுடைய அந்த உண்மையான உணர்வை அந்த கவலையை, கோபத்தை உணர்ந்து விடமுடியும் என்பது நவீன ஆராய்ச்சிகளின் முடிவு. 
 
நாங்கள் எங்களை நம்பி அன்பாக உணர்ந்து தன்னம்பிக்கையோடு பிள்ளைகளை அணுகினால் மட்டுமே அவர்களும் அவற்றை உணர்வார்கள். அவர்களும் தன்னம்பிக்கை அடைவார்கள். தமது வாழ்க்கையை சரிவர கொண்டு செல்லாத பெற்றோரால் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றமுடியாது. பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் கேட்பதில்லை. அவர்கள் செய்வதை குழந்தைகள் பார்க்கின்றார்கள். அவர்கள் உணர்வதை குழந்தைகள் உணர்கின்றார்கள். ஆக சிறு வயதிலேயே தன்னம்பிக்கை கொண்ட பிள்ளை வளர்ந்த பின்னும் அப்படியே வாழும். 
 
பெரியவர்கள் எவ்வாறு தன்னம்பிக்கையை அடைவது என்பதும் மிக முக்கியமானதாகும். முதலில் எந்த விடயங்களில் நாம் நம்பிக்கை இழக்கின்றோம் என பார்க்க வேண்டும். அதற்கும் கடந்த காலங்களில் நிகழ்ந்த சந்தர்ப்பங்களிற்கும் தொடர்புள்ளதா என பார்க்க வேண்டும். 
 
உதாரணமாக ஒருவர் மேடையில் பேச தயங்குகின்றார் எனில் சிலவேளைகளில் சிறுவயதில் அவர்மேடையேறியிருந்தும் சரிவர பேச முடியாத சம்பவம் ஒன்று நடந்திருக்கலாம். அது அவருக்கு நினைவிருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம். இப்படியான சில விடயங்கள் சிறு வயதுகளில் நடப்பது கூட பெரியவர்களானபின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இந்த அனுபவங்கள் ஏற்படிருக்கலாம். பெற்றோரால், சகோதரர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படியான விடயங்கள் இருந்தால் அவற்றை உணரவேண்டும். 
 
உணர்வதுதான் முதலாவது படி அந்த பதிவுகளை நீக்குவதற்கு. அவர்கள் என்னைப்போன்றவர்களிடம் வந்து ஹீலிங் பெறுவதன் மூலமும் அவற்றை நீக்கலாம். ஹீலிங் முறை அவர்களுடைய பழைய பதிவுகளால் ஏற்பட்ட சக்திகளை நீக்கி புதிய சக்திகளை வழங்குவது ஆகும். அனைத்துமே சக்திகளின் அடிப்படையில் இயங்குவதால் அது சாத்தியமானதேயாகும். 
 
ஆகவே தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அடிப்படையானதுமாகும். தன்னம்பிக்கை மற்றும் தன்னைப்பற்றிய சுய அறிவு அவருடைய வாழ்க்கையில் எதிரொலி போல இயங்கும். ஒருவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டதோ அல்லது எப்படி அதை அவர் உணர்கின்றாரோ அதுதான் அவருடைய வாழ்க்கை ஆகும். அதனால் வாழ்வின் அடிப்படையான இந்த இயல்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 
- திருமதி ஞானா உருத்திரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்