தேவையற்ற பேச்சுக்களே பிரச்சினையின் தொடக்கம்
14 ஆனி 2017 புதன் 16:57 | பார்வைகள் : 8869
25 வயதை கடந்துவிட்டாலே ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்வி கூடவே பின்தொடர தொடங்கிவிடும். ஆனால் தற்போது ஆண்-பெண் இருபாலருமே முடிந்த அளவுக்கு திருமணத்தை தள்ளிப் போடவே விருப்பப்படுகிறார்கள். இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்போது பொறுப்புகளும் கூடத்தொடங்கி விடுவது முக்கிய காரணமாக இருக்கிறது. பொருளாதார நிலைமை, தனி மனித சுதந்திரம் பற்றிய சிந்தனையும் பெரும்பாலானோரிடம் தலைதூக்குகிறது. பெண்களை பொறுத்தவரையில் குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, வேலைக்கு செல்வது என ஏராளமான பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
திருமண பந்தத்தில் இணைபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
* மாதச்சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், தொழில் செய்பவர்களாக இருந்தாலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்தி செல்வதற்கு நிலையான வருமானம் மிக அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும்.
* ஆண்கள் முதலிலேயே மாத வருமானத்தை மணப்பெண்ணிடம் சரியாக கூறிவிட வேண்டும். அதில் ஒளிவு, மறைவு கூடாது. இல்லாவிட்டால் இல்லற வாழ்க்கையின் தொடக்கமே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துவிடும்.
* மனைவி வேலைக்கு செல்வதாகவே இருந்தாலும் ஆரம்பத்தில் கணவன் தன்னுடைய வருமானத்தில் குடும்பத்தை நிர்வகிப்பதற்கு வழிவகை செய்து கொள்ள வேண்டும்.
* கர்ப்பமான காலகட்டத்தில் ஒருவருடைய வருமானம் தடைபடும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப செலவுகளை சுருக்கிக்கொள்ள வேண்டும்.
* திருமணத்திற்கு பேசி முடிக்கும்போதே மணமகனும், மணமகளும் குடும்பத்தை சுமுகமாக வழிநடத்தி செல்வதற்கு தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டு பெரியவர் களின் அறிவுரைகளும், அவர்களுடைய அனுபவங்களும் இல்லற வாழ்க்கை இனிமையாக தொடங்க கைகொடுக்கும்.
* கூட்டுக்குடும்ப வாழ்க்கையா? தனிக்குடித்தனமா? என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நகர்புறத்தில் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தனிக் குடித்தன வாழ்க்கையையே தொடங்கும் நிர்பந்தத்தில் இருக் கிறார்கள். கணவர், அவருடைய வீட்டினர் விருப்பத்துடன் தனிக்குடித்தன வாழ்க்கையை தொடர்வதில் தவறில்லை. ஆனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் கணவனை வலுக்கட்டாயமாக தனிக்குடித்தன வாழ்க்கைக்கு அழைக்க முயற்சிப்பது குடும்பத்துக்குள் விரிசலையே ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே கணவன் தன்னுடைய குடும்ப நிலவரத்தை எடுத்துக்கூறி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட வேண்டும்.
* திருமணமான தொடக்கத்தில் வாழ்க்கை இனிமையாகவே நகரும். அப்போதே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு தங்களுடைய நிறை, குறைகளை சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கருத்துவேறுபாடு, முன்கோபம், ஈகோ, தனித்துவம் என பிரச்சினைகள் முளைக்க தொடங்கிவிடும். கூட்டுக் குடும்பமாக இருந்தால் பிரச்சினைகள் வெடிக்க தொடங்கும்போதே வீட்டு பெரியவர்கள் அறிவுரை கூறி நிலைமையை சுமுகமாக்கிவிடுவார்கள். ஆனால் தனிக்குடித்தன வாழ்க்கையில் சமாதானம் பேசுவதற்கு யாருமே உடன் இருக்கமாட்டார்கள். தாங்கள் செய்வது சரிதானா? என்று சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
* பிரச்சினைகள் ஏற்படும்போது ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்து இருவரும் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* புதுமண தம்பதிகளில் சிலர் ஓரளவு குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். அது சரியா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் குழந்தை பிறப்பையும் தள்ளிப்போடுவது பின்விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் கணவன்-மனைவி இருவரிடையேயும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். சரியான திட்டமிடலும் அவசியம். குழந்தை பெற்றுக்கொண்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்கு தேவையான விஷயங் களையும் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
* திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்கள் பெயரின் ‘இன்ஷியலை’ மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள் நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கையின் சுய அடையாளத்தை மாற்றுவதற்கு காரணமாகிவிடக்கூடாது. பெண்களின் விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும்.
* திருமணத்திற்கு முன்பு தாயிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அரவணைப்பும் புகுந்த வீட்டில் தொடருமா? என்ற எண்ணம் பெண்களுக்கு திருமணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தும். புதிய சொந்தங்களையும், கணவர் வீட்டு உறவுகளையும் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். அனைவருக்கும் பிடிக்கிற மாதிரி நடக்க வேண்டியிருக்கும். யாருடைய மனமும் புண்படாத வகையில் இனிமையாக நான்கு வார்த்தைகள் பேசினாலே உறவை சுமுகமாக்கிவிட முடியும். தேவையற்ற பேச்சுகள் பிரச்சினையின் தொடக்கமாக அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். புகுந்த வீட்டு உறவுகளையும் தன் வீட்டு உறவுகளாக பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும்.