மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்
17 பங்குனி 2017 வெள்ளி 17:03 | பார்வைகள் : 8466
எல்லோருக்கும், எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கத்தான் விருப்பம். ஆயினும், ‘சந்தோஷமா... அமைதியா இருக்க விரும்பறேன்’ என்று சொல்லிக்கொண்டே அதற்கு எதிர்ப் புறமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.
அந்த விஷயங்கள்...
மூச்சுப் பயிற்சி: மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான அமைப்பு, நமக்குள்ளேயே உள்ளது. அது, நம் மனமும் நுரையீரலும்தான். மூச்சை ஆழ உள்ளிழுத்து, நிதானமாக வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். அமைதியாக அமர்ந்து உங்கள் சுற்றுப் புறத்தைக் கவனியுங்கள். ஐம்புலன்களைக் கூர்மைப்படுத்துங்கள். இந்தச் செயல்கள் எல்லாம் உங்கள் மனஅழுத்தம் போக்கும்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி, அது வெறும் நடைப்பயிற்சியாக இருந்தாலும்கூட மனநலத்துக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. ஆனால் வீட்டுக்குள்ளாக நடைப்பயிற்சி எந்திரத்தில் நடப்பதை விட திறந்தவெளியில் காலாற நடப்பது நல்லது.
புதிய அனுபவங்கள்: சந்தோஷத்துக்காகவே ‘ஷாப்பிங்’ செல்வதும், பொருட்களை வாங்கிக் குவிப்பதும் சிலரின் வழக்கம். ஆனால் அதையும்விட, புதிய அனுபவங்கள் அதிக மகிழ்ச்சி தரும். ஒரு சாகச அனுபவம், புதிய நிகழ்ச்சி என்று வித்தியாசமாக முயற்சித்துப் பாருங்கள்.
எழுத்தில் வடித்தல்: மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களை இறக்கிவைப்பது, அதாவது டைரி எழுதுவது போன்ற எழுத்தில் வடிப்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என் கிறார்கள் நிபுணர்கள்.
பிடித்த இசை: மனம் படபடப்பாகவும், அமைதியின்றியும் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த இசை, பாடலை ஒலிக்கவிடலாம். அது மூளையையும் இதயத்தையும் எட்டி உங்களை அமைதிப்படுத்தும்.
மகிழ்ச்சி மனிதர்கள்: எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுடன் இருந்தால் நம்மையும் அந்த ‘வியாதி’ தொற்றிக்கொள்ளும். நாமே தேடித் தேடி சோக நினைவுகளை மீட்டு, சோக இசையை வாசித்துக்கொண்டிருப்போம். எனவே எப்போதும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களுடன் பழகுங்கள். உங்களையும் மகிழ்ச்சித் தீ பற்றிக்கொள்ளும்.
போதை பாதை: கடுமையாக உழைப்பவர்களும், எப்போதும் நெருக்கடியில் பணிபுரிபவர்களும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்கிறேன் என்று அந்தந்த நாளின் முடிவில் மதுபோதை போன்றவற்றை நாடுகிறார்கள். இது மிகவும் தவறு. இது ஆரம்பத்தில் அமைதி, மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நாளடைவில் உடல்நல, மனநல பாதிப்புகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாகச் சூறையாடிவிடும்.
சுற்றுலா: அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்றுவருபவர்களும், சுற்றுலாவில் நாட்டமுள்ளவர்களும் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு. புதிய இடம், புதிய நபர்கள் எப்போதுமே ஓர் உற்சாகம் தருவார்கள். எனவே, வாரயிறுதிச் சுற்றுலாவாக இருக்கட்டும், ஒரு வார காலச் சுற்றுலாவாக இருக்கட்டும். அடிக்கடி எங்காவது சென்றுவாருங்கள்.
உறக்கம் அவசியம்: நீங்கள் வழக்கமாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் செல்லுங்கள். காரணம், உறக்கத்துக்கும், மனநலத்துக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. தூக்கம் குறைந்தவர்களிடம் அமைதி தொலைந்திருக்கும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுவார்கள். தூங்கும் நேரத்தைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
மனந்திறந்து பேசுங்கள்: நமது உணர்வுகள், கவலைகளை நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் மனந் திறந்து பேசுவது நன்மை தரும். மனநல ஆலோசகர்களிடமும் பேசலாம். நாம் நம் கவலைகள், பிரச்சினைகளை நமக்குள்ளேயே அமுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போது மேலும் மேலும் ஊதப்படும் பலூன் போலவே ஆகிறோம் என் கிறார்கள் நிபுணர்கள். அதாவது ஒருகட்டத்தில் நம்மையும் அறியாமல் வெடித்துவிடுவோம். எனவே, காற்றை மெல்லத் திறந்துவிடுவது போல பிறருடன் மனந்திறந்து பேசுங்கள்.