திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு
14 பங்குனி 2017 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 8793
புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு போதுமான கால அவகாசம் அவசியம். அவர்களுக்குள் உறவுகளை பற்றிய புரிதலும் இருக்க வேண்டும். குறிப்பாக புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் பெண், கணவர் வீட்டாரின் உறவுகளை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் ‘புதுப்பெண் நம்மை மதிக்க வேண்டும். நம்முடைய ஆலோசனைக்கு செவி சாய்த்து நடக்க வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள்.
அதேவேளையில் உறவுகளின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கலாம் என்ற வரையறை இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் உறவுகளின் தலையீடு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை பலகீனமாக்கி விடுகிறது. தலையீடுகளையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் காண்போம்.
புதுப்பெண் வீட்டாரின் தலையீடு :
திருமணமாகி புகுந்த வீடு சென்றிருக்கும் மகள், அங்கு எப்படி தாக்குப்பிடிப்பாளோ என்ற கவலை அவளது பெற்றோருக்கு இருக்கத்தான் செய்யும். திருமணத்திற்கு முன்பு மகளின் வாழ்க்கையில் அவர்கள் பல்வேறு விதமாக தலையிட்டிருக்கலாம். அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண் காணித்து வழிநடத்தியிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு மகளின் வாழ்க்கையில் அதிக உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது. புதுமணத் தம்பதிக்குள் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சற்று விலகி இருந்தே கவனிக்க வேண்டும்.
அந்த மாதிரியான நேரங்களில் ‘சொந்த மகளின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை கண்டும், காணாமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பாமல், ‘எதையும் சமாளித்துக்கொள்ள அவளுக்கு தெரியும்’ என்று மகள் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். அதை விடுத்து சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்தால் உங்களால் அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துவிடும்.
சில பிரச்சினைகள் தீர்க்க முடியாததாகவும் ஆகிவிடும். அதனால் முடிந்த அளவு மணப்பெண் வீட்டார், தங்கள் மகளின் வாழ்க்கையில் தலையிடாமல் இருப்பது நல்லது. தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஒருதரப்பிற்காக வாதிடாமல், இருவரிடமும் இணக்கமான சூழ் நிலையை உருவாக்கி, அவர்களை அதற்காக கற்றிருக்கும் ஆலோசகர்களிடம் அனுப்பி, தேவையான ஆலோசனைகளை பெறச்செய்யவேண்டும்.
கணவன்- மனைவி இடையே மனக்கசப்பும், பிரிவும் ஏற்படுவதற்கு முன்னால் அதை செய்ய வேண்டும். ஒருவர் மீது இன்னொருவர் அவநம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்கிவிடக்கூடாது.
மாப்பிள்ளை வீட்டாரின் தலையீடு:
மாப்பிள்ளை வீட்டாரும், மகனின் வாழ்க்கையில் தலையிடவில்லை என்று மேம்போக்காக கூறிக்கொண்டு மறைமுகமாக பிரச்சினைகள் உருவாக காரணமாக இருக்கக்கூடாது. உறவினர்கள், வெளிமனிதர்கள் மத்தியில் மகன், மருமகளை பற்றி விமர்சிப்பதும், அரசல்புரசலாக பேசுவதும் தலையீடு தான். நேரடியாக தலையிடுவதை விட இதுபோன்ற செயல்கள் அதிக பாதிப்பை உண்டாக்கும்.
புகுந்த வீட்டிற்கு வந்திருக்கும் பெண்ணால் உடனடியாக அவளுடைய பழக்க வழக்கங்களை மாப்பிள்ளை வீட்டாரின் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாது. குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துசெல்லும் பக்குவம் அவளுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த மாற்றங்கள் புதுப்பெண்ணிடம் ஏற்படாத போது மனம்விட்டுப்பேசி புரியவைக்கவேண்டும். அதற்குரிய பக்குவம் அனுபவப்பட்ட மாமனார், மாமியாரிடமே இல்லாமல் போனால் அதை மருமகளிடம் எதிர்பார்ப்பது தவறு.
நாத்தனார் தலையீடு:
பெரும்பாலான குடும்பங்களில் அதிக பிரச்சினைகள் உருவாகுவதற்கு கணவரின் சகோதரிகளின் தலையீடும் ஒரு காரணமாக இருக்கிறது. போதிய அனுபவமும், பக்குவமும் இல்லாதவர் களாக இருந்தால் அவர்களின் தலையீடு பலவித சிக்கல்களை உருவாக்கும். கூடுமானவரை சகோதர பாசம் என்ற அக்கறையின் பேரில் அதீத தலையீடு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
நாத்தனாரின் தலையீடு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக இருந்தால், உடனே பெரியவர்கள் தலையிட்டு அதற்கு புற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். தவறான அனுமானங்கள், தவறான புரிதல்கள் காரணமாக புதிதாக வீட்டுக்கு வந்த பெண்ணை, நாத்தனார்கள் மரியாதை குறைவாக நடத்துவது நல்லதில்லை. தன் சகோதரரின் மனைவியிடம் எல்லைமீறி பேசுவது, அவளுடைய செயல்பாடுகளை விமர்ச்சிப்பது, மரியாதையின்றி நடத்துவது இதையெல்லாம் யாரும், எப்போதும் அனுமதிக்கக் கூடாது. புதுப்பெண்ணுக்கு தேவையான எல்லா மரியாதைகளையும் புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் கொடுத்தே ஆகவேண்டும்.
ஜாதி, மத தலையீடு:
காதல் திருமணங்கள் இப்போது நிறைய நடக்கின்றன. அதிலும் ஜாதி, மதங்களை கடந்தும் பலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது வரவேற்கத்தகுந்தது. ஆனால் பல குடும்பங்களில் அது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் அவரவர் மதத்தை பற்றிய பெருமையும், நம்பிக்கையும் இருக்கும். ஆனால் அதை அடுத்தவர் மீது திணிக்கக்கூடாது. வீட்டிற்கு வரும் மருமகள் வேற்று மதத்தை சார்ந்தவராக இருந்தால் அவள் விருப்பப்படி விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்ப அமைதிக்கு நல்லது. பாரம்பரியத்தோடு வளர்ந்த நம்பிக்கை சார்ந்த விஷயத்தை திடீரென்று மாற்றிவிட முடியாது.
அது கலாசார அதிர்ச்சியை கொடுக்கும். பின்பு அதை தொடர்ந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அது மூலகாரணமாகிவிடும். அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு ஏற்படும் நம்பிக்கையை மாற்ற முடியாது. உயிரோடும், உணர்வோடும் ஒன்றிப்போன விஷயத்தை பாதியில் மாற்றுவது என்பது முடியாத ஒன்று.
திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருதரப்பு ஜாதியும், மதமும் உயர்ந்தது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றைக்கூட சிறுமைப்படுத்தாமல், இரண்டையும் உயர்வாக கருதவேண்டும். அதை பற்றி பேசுவதை குறைத்து, குடும்ப வாழ்க்கையை உயர்த்துவது பற்றி ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.