பேச்சை குறையுங்கள்... பிரச்சனைகள் தீரும்...
7 மார்கழி 2016 புதன் 10:38 | பார்வைகள் : 8724
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பேச்சு தேவை தான். அதற்காக எப்போதும், எங்கும், எல்லாவற்றிலும் பேச்சு தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும்.
ஒரு சிலரை கண்டால் பயம் ஏற்படுகிறது. அவர் வந்தாலே பெரிய பிளேடு போடுவார், நாம் நைசாக நகர்ந்து விட வேண்டியதுதான் என்று சொல்லும் அளவுக்கு சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதிகமாக பேசினால் நம்முடைய எனர்ஜி குறைந்து விடும்.
பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். சுருக்கமாக பேச வேண்டும். பேசியதையே திரும்ப, திரும்ப பேசக்கூடாது. இதனால் உடலின் சக்தி வீணாகாமல் பார்த்து கொள்ளலாம். பிறரை பற்றி ஏளனமாக பேசுதல், கோள் சொல்லுதல், எதற்கெடுத்தாலும் குறை சொல்லுதல், இடக்கு, மடக்காக பேசுதல் போன்றவற்றால் மனம் தன்னுடைய போக்கிலிருந்து மாறுகிறது.
அது உடலில் பாதிப்பை கொடுக்கும். ஆனால் அது அவருக்கு தெரியாது. எனவே இந்த தீய பழக்கங்களை விட்டு விடுவதை பற்றி சிந்திக்க வேண்டும். இதனால் ஒரு பக்கம் பாவத்தை சேர்க்கிறோம் என்றாலும் நம்முடைய குணபாவத்தையே மேலே கூறியவாறு பேசி வந்தால் மாற்றிவிடும்.
இதனால் நம்முடைய செயல்பாடுகளில் குறை ஏற்படுகிறது. நிதானித்து, சிந்தித்து நம்மால் பேச முடியாது. பேச்சு என்பது நம்மை மீறிய செயலாக உள்ளது. கடுமையான வார்த்தைகள் நம்மை அறியாமலேயே நம்மிடமிருந்து வெளிவருகின்றன. பேசிய பிறகுதான் அவ்வளவு கடுமையாக பேசியிருக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு‘
என்கிறார் திருவள்ளுவர். அந்த குறள் புத்தகத்தோடு போய் விடுகிறது. யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. இனி கடுமையான வார்த்தைகளால் யாரையும் பேசுவதில்லை என்று தீர்க்கமாக, திடமாக, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். அதை நடைமுறையில் தினமும் பயன்படுத்த வேண்டும்.