மாமியார் பாராட்டும் மருமகளாக வேண்டுமா?
23 ஆனி 2014 திங்கள் 13:04 | பார்வைகள் : 9221
இந்த சமூகத்தில் ஒரு பெண் தன் மாமனார்-மாமியாரை சமாளித்து வாழ்வது என்பது மிகவும் பெரிய விஷயம். மாமியார் 'கொடுமை' தாங்க முடியாமல் 60 சதவீதம் பெண்கள் கஷ்டப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் வீம்பு பிடிப்பதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் வருகின்றன. வயதாகிவிட்ட காரணத்தினால் மாமியார்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
எனவே, மருமகள்கள் கொஞ்சம் மனது வைத்து இறங்கி வந்தால், புகுந்த வீட்டில் அவர்கள் நல்ல பெயரைச் சம்பாதிக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் ஒரு புது மருமகள் என்பதைப் போல, மாமியார் என்ற 'பதவி'யும் அவர்களுக்குப் புதிதுதான். நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள். மாமியார் மனதும் மாறும். உங்கள் மாமியாரை உங்கள் தாய்க்கு சமமாக நடத்துங்கள்.
உங்கள் அம்மாவுக்கு என்ன என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, அவற்றை உங்கள் மாமியாருக்கும் செய்யுங்கள். அதே போல் மாமியார் ஏதாவது கோபப்பட்டாலும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் மாமியாரை எப்போதும் மரியாதையாக நடத்துங்கள்.
வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அவர் கடந்து வந்திருப்பார். அனைத்தையும் பற்றி அவருடன் உண்மையான அக்கறையுடன் கேளுங்கள். உங்களிடம் அவருடைய அன்பு பெருக ஆரம்பிக்கும்.
உங்கள் மாமியாரிடம் மட்டுமின்றி, உங்கள் கணவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் ரொம்ப அக்கறையாக இருங்கள். அவர்களுடைய இன்பம், துன்பம், வேலை, படிப்பு என்று அனைத்திலும் அக்கறை காட்டினால் உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
எந்த முக்கியமான விஷயத்தையும் மாமியாரிடம் உடனடியாகத் தெரிவித்து விடுங்கள். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறீர்களா? அடிக்கடி அவர்களுடன் பேசுங்கள். உங்கள் மாமியாருடைய அறிவுரைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டாம். உங்களை விட அவர்களுக்கு வயதும் அனுபவமும் அதிகம் தான்.