Paristamil Navigation Paristamil advert login

காதல் பல்லி வால் போன்றது..

காதல் பல்லி வால் போன்றது..

20 வைகாசி 2014 செவ்வாய் 11:31 | பார்வைகள் : 9972


‘நீங்கள் காதலர்களாக இருந்தால் ‘ரோமியோ-ஜுலியட்’, ‘அம்பிகாபதி-அமராவதி’ போன்ற ஜோடிகள் உங்கள் நினைவில் வரக்கூடாது. அவர்களுக்கு பதிலாக பல்லி ஒன்றுதான் உங்கள் நினைவுக்கு வரவேண்டும்’ என்று நவீன உளவியலாளர்கள் சொல்கிறார்கள். 
 
‘ரோமியோ- ஜூலியட்டை நினைத்துக்கொண்டிருந்தால், காதல் ஒரு வெறித்தனமாக மாறிவிடும். காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டால் ‘ஒன்றாக சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. ஒன்றாக மாண்டு விடலாம்’ என்ற முடிவுக்கு வந்து விடக்கூடும். 
 
அல்லது காதலர்களில் யாராவது ஒருவர் காலை வாரிவிட்டால், அவரை பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு வந்து விடக்கூடும்.இவை இரண்டும் கிட்டத்தட்ட வன்முறை கலந்த உணர்வுதான். அதற்கு பதிலாக பல்லியை நினைத்துக்கொண்டால் மனம்அமைதியடையும். 
 
எப்படி என்றால் ஆபத்து வரும் போது பல்லி தன் வாலை துண்டித்துவிட்டு, உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிவிடும். அதுபோல் காதலுக்கு சிக்கலோ, பிரச்சினையோ, ஒருவரை ஒருவர் ஏமாற்றினாலோ பல்லி வாலை துண்டிப்பதுபோல் (காதலை) துண்டித்துவிட்டு, வாழ்க்கையை இயல்பாக நடத்த பழகிக் கொள்ளவேண்டும்’ என்பது அந்த உளவியலாளர்களின் புதியகணிப்பாக இருக்கிறது. 
 
பார்த்தவுடன் வருவது காதல் அல்ல. அது அந்தப் பருவத்தில் வருகின்ற ஒருவித ஈர்ப்பு. அது காதலே அல்லாத பட்சத்தில் அதற்காக ஏன் உயிரை விடவேண்டும். பழகிய சில நாட்களிலேயே அந்தகாதல் தவறாக தெரிந்தால் அதனை பல்லி வால் போன்று வெட்டிவிடுவதுதான் நல்லது. 
 
பொழுதுபோக்குக்காகவோ, பணத்திற்காகவோ உருவாகும் காதல் எவ்வளவு காலம் நீடித்தாலும் அது நிஜமான காதல் ஆகாது. இதனால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவீர்கள்.அதனால் அதனை போகிற வரை போகட்டும் என்று இழுத்துக்கொண்டே செல்லாதீர்கள். 
 
திடீரென்று அது உங்களையும் சேர்த்து இழுத்து சென்றுவிடும். அதனால் அந்த காதலை பல்லி போல் (வாலை) துண்டித்து விடுங்கள். காதல் உலகத்திலே மிகச்சிறந்தது என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தால் பிரிவு வரும்போது மனது உடைந்துபோகும். 
 
அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். இதனால் தன் குடும்பத்திற்கும், உடனிருக்கும் உறவினர்களுக்கும் மனவருத்தம் ஏற்படும். உங்கள் காதல் தோல்விக்காக குடும்பத்தினர் மனதை நோகடிப்பது சரியான செயல் இல்லையே. 
 
குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய வைப்பதுதான் உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும். கவலையடைய வைப்பது உங்கள் நோக்கமாக இருக்கக்கூடாது. காதலிக்கும்போது அறிவாளியாக இருப்பவர்கள், காதல் தோல்வி அடையும்போது ஏன் முட்டாள்போல் மாறவேண்டும். மனித வாழ்க்கையில் எல்லாவற்றிலும் வெற்றி தோல்வி உண்டு. 
 
அப்படியிருக்கும் போது காதல் மட்டும் எப்படி தோல்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதிலும் தோல்வி உண்டு. அதில் துவண்டுபோகாத அளவுக்குத்தான் மனித இயல்பு இருக்கவேண்டும். காதல் ஒன்றும் மோசமானதல்ல.காதலர்கள் நடந்து கொள்ளும் முறையால் தான் மற்றவர்கள் காதலை மோசமானதாக கருதி எதிர்க்கிறார்கள். 
 
காதலரில் ஒருவர் பிரியும்போது இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டால்,அது காதலுக்கு களங்கம். அந்தகளங்கம் பெற்றோர் மனதில் நிலைத்து விடும் போது, தங்கள் பிள்ளைகள் காதலிக்கும் போது எதிர்ப்பார்கள். 
 
ஏன் என்றால் அவர்களது காதல் தோற்றுவிட்டால்,அவர்களும் அது போன்றகொடிய முடிவை எடுத்து விடுவார்களே என்று பயப்படுவார்கள். காதலர்கள் தங்கள் காதலை ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். உடல்கவர்ச்சி, ஈர்ப்பு, பணம் சார்ந்த விஷயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, காதல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். 
 
தங்கள் காதல் சுயநல மற்றதாக இருக்கிறதா? புத்திசாலித்தனமாக இருக்கிறதா? இருவரது நோக்கமும் எப்படி இருக்கிறது?அந்தகாதலால் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு வருமா? என்றெல்லாம் பல வழிகளில் சிந்தித்து பார்க்கவேண்டும். 
 
எப்போது அந்த காதல்,‘தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்கும்’என்று கருதுகிறீர்களோ அப்போதே அதை புரியவைத்து, அதில் இருந்து விலகிக் கொள்ள முன்வர வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டு விலகும் பக்குவம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாது. அந்த நேரத்தை வேறு ஏதாவது நல்ல சேவைக்கு பயன்படுத்தலாம்.
 
முதல் காதலிலேயே வாழ்க்கை முடிந்துபோய்விடாது என்பதை காதலிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.காதலில் எந்தநேரத்திலும் இடர் வரலாம் அப்போது இருவரில் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் இருவருமே மிகக்கவனமாக இருக்கவேண்டும். 
 
காதலிக்கும்போது பழகியது, பேசியது எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவில் வரத்தான் செய்யும்.மனதை வாட்டத்தான் செய்யும். உடனே அதனை மறக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் மறந்துவிட முடியும் என்பதும் உண்மைதான். 
 
அதனால் தான் கிரேக்க உளவியலாளர்,'காதல் பல்லிவால் போல இருக்கவேண்டும். பல்லி தனக்கு ஆபத்து வரும் போது தன்னுடைய வாலை பறிகொடுத்துவிட்டு தப்பித்துக்கொள்ளும். 
 
அதுபோல் காதலால் உயிர் பறிபோகும் என்ற நிலை ஏற்பட்டால் காதலை(வாலை)துண்டித்து விடவேண்டும்' என்கிறார். காதலுக்காக உயிரை விடுவது காட்டு மிராண்டித்தனம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்