Paristamil Navigation Paristamil advert login

மண முறிவிற்கான அடிப்படைக் காரணம்

மண முறிவிற்கான அடிப்படைக் காரணம்

1 வைகாசி 2014 வியாழன் 15:31 | பார்வைகள் : 10184


 • ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.

 
• சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர். 
 
• ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. 
 
• கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர். இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது. 
 
உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. 
 
இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர். 
 
முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. 
 
இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். 
 
கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். 
 
பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர். கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. 
 
சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம்.ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். 
 
அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாக அமையலாம்.. ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. 
 
அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் எவ்வளவு வேதனை அடையும்... அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்.... அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்