விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே
4 சித்திரை 2014 வெள்ளி 15:33 | பார்வைகள் : 9988
பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினையின் தொடக்கம் விவாதம். அந்த விவாதத்தின் மூலம் அந்த செயலுக்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடுகிறது. அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடுகிறது.
சமீபகாலங்களில் அதிகரித்து வரும் மனமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக இருக்கின்றன. தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதம், இருவரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன.
அத்தகைய கடுமையான வார்த்தைகள் இருவரில் யாருக்கும் எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் அத்தகைய வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த, அவர்களிடம் ஏற்படும் ஆத்திரமே காரணம்! சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்து விடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்து விடுகிறார்.
கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த ஒரே ஒரு வார்த்தைதான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிடுகிறேன். ஆனால் பேசிய வார்த்தையை என்னால் காலம் முழுக்க மறக்கவே முடியாது’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்துவருகிறது.
அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ செல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.
குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம். கணவன்- மனைவி இடையே அவர்களே விவாதிக்ககூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன.
அவர்கள் இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம்.
மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக் கொண்டவர்கள் ஏராளம். மனைவி மூன்றாம் நபர்களிடம் தங்களைப் பற்றி தவறாக குற்றச்சாட்டுகள் கூறிதால், மனம் உடைந்தவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். குற்றச்சாட்டுகள் ஆண், பெண் இருவரையும் கடுமையாக பாதிக்கிறது.
அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்க வேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்கு வாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.