Paristamil Navigation Paristamil advert login

முத்தம் கொடுங்கள் ஆயுள் அதிகரிக்கும்.....

முத்தம் கொடுங்கள் ஆயுள் அதிகரிக்கும்.....

5 தை 2015 திங்கள் 06:37 | பார்வைகள் : 8612


முத்தம் போராட்ட களத்திற்குரியதல்ல, அது அன்பின் வெளிப்பாடு. பிறக்கும் குழந்தைக்கு தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான் அதன் ஜென்மம் தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில்தான் ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது. 

 

இந்த இரண்டு முத்தத்திற்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதன் வாழும் காலம். ஆனால் இதில் வேடிக்கை என்ன வென்றால் முதல் முத்தம் பெறும்போது அது குழந்தை. அந்த முத்தத்தின் சுவையை தாய்தான் அனுபவிக்கிறாள். கடைசி முத்தம் பெறும்போது அவன் இறந்துபோகிறான். அந்த முத்தத்தின் சுவையையும் அவனால் உணரமுடிவதில்லை. 

 

இரண்டுக்கும் இடையே இருக்கும் சத்தற்ற முத்தங்கள்தான் பெரும்பாலும் சத்தங்கள் எழுப்புகின்றன. தாய் தனது குழந்தைக்கு கொடுத்த முதல் முத்தம் அவளுக்கு நினைவிலே இருப்பதால்தான், குழந்தை வளர்ந்து பாட்டி ஆனாலும் தாய் அவளை குழந்தையாகவே பார்க்கிறாள். முதல் முத்தம் கொடுத்த அந்த முகமே நினைவில் நிற்பதால் தன் பிள்ளை செய்யும் அத்தனை தொந்தரவுகளையும் ஏற்றுக்கொள்கிறாள். 

 

‘அன்பு, நம்பிக்கை ஆகிய இரண்டையும் உதடுகள் ஒன்று சேர்ந்து– ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் கொண்டுபோய் சேர்ப்பதே முத்தம்’’ என்கிறது, முத்த தத்துவம். ஆங்கிலேய கவிஞர் ஷெல்லி, ‘நீங்கள் ஆன்மாவை பார்க்கவேண்டும் என்றால் காதலிகளின் உதடுகளை பார்த்தால் போதும்’ என்று முத்தத்திற்கு சத்து சேர்த்திருக்கிறார். 

 

இப்படி இயற்கையை முத்தத்தோடு இணைத்தாலும், இருவர் இணைந்து முத்தம்கொடுக்கும்போது உடலுக்குள் ரசாயன மாற்றங்களும் நிகழத்தான் செய்கின்றன. விருப்பத்தோடு முத்தமிடும்போது இருவர் உடலும் பூப்போல் மலர்கிறது. அது ஒரு விவரிக்கமுடியாத ஆனந்தம். அதனால்தான் உடலில் இருக்கும் அன்பு சுரப்பிகள் முத்தங்களுக்காக ஏங்குகின்றன. 

 

முத்தம் என்பது உதடுகளின் செயல்பாடு மட்டுமல்ல! உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் முத்தம் முழுமையடைகிறது. சருமத்திற்கு இடையேயான தொடுதலில் தொடங்கும் அனுபவம் இறுதியில், நுனி நாக்கில் நிறைவடைகிறது. முத்த தம்பதிகள் உணராவிட்டாலும் முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. 

 

உதடுகள் சற்று விம்முகின்றன. உடலில் ரத்த அணுக்களின் நிலையிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. சுவாச பகுதியும் கூடுதல் ஆக்சிஜனை அப்போது சேகரிக்கிறது. இதயம் வேகமாக இயங்குகிறது. லேசாக வியர்க்கவும் செய்கிறது. முத்தத்தில்கூட முரட்டுத்தனம் உண்டு. அந்த முத்தத் தீ ரத்தம் கண்ட பின்புதான் அணையும். 

 

உதடுகளிலும், நாக்கிலும் காயத்தை உருவாக்கிவிடும். முத்தத்திற்கு பல முகங்கள் இருக்கின்றன. கணவனாக இருந்து கசப்பை மறக்கவைக்கும். காதலாக இருந்து இனிக்கவைக்கும். வேதனைப்படும்போது ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் தரும். ‘விட்டுத்தொலை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தேறுதலை தரும். வலியை, விரக்தியை போக்கடிக்கும்.

 

உயிரை விடும் எண்ணத்தில் இருப்பவர்களைக்கூட ஒரு முத்தம் காப்பாற்றிவிடவும் செய்யும். அதனால்தான் முத்தத்திற்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதையும் வகைப்படுத்தி ‘எக்ஸ்கிமோ கிஸ்’, ‘ஸ்பைடர் மேன் கிஸ்’, ‘ஏஞ்சல் கிஸ்’, ‘பிளையிங் கிஸ்’ என்று அழகழகான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். 

 

மனைவி தன் கணவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. கைகளில் முத்தம் கொடுப்பது, ‘நாங்கள் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டோம்’ என்று நம்பிக்கை கொடுப்பதாகும். தாம்பத்யத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது.

 

நல்ல தாம்பத்யத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது. போகப்போக அது சூறாவளியாக வீசத் தொடங்குகிறது. வங்கியில் பணம் போடும்போது வட்டியோடு சேர்த்து கிடைக்கும் என்பதுபோல் முத்தத்திற்கும் வட்டி உண்டு. கொடுக்கும் முத்தம் வட்டியோடு சேர்ந்து வளமாக திரும்ப கிடைக்கும். அன்பு மனது நிறைய இருந்து என்ன பயன்? அதை முத்தம் மூலமாக கொடுத்தால்தானே நிரூபணமாகும். 

 

முத்தம் அன்பை அதிகரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களையும் செய்யும். அந்த பாட்டிக்கு 100 வயது. தாத்தா அதையும் தாண்டிவிட்டார். அவர்களை வாழ்த்த சென்ற டாக்டர் ஒருவர், ‘உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?’ என்று கேட்டார். 

 

பாட்டி ‘முத்தம்’ என்று சத்தமாக பதிலளித்தார். டாக்டர் சுதாரித்துக்கொள்ள முடியாமல் தடுமாற, பாட்டியே தொடர்ந்தார். ‘எங்களுக்குள் இருக்கும் அன்பை, இருவரும் முத்தத்தின் மூலம் பங்குவைத்துக்கொள்வோம். அது வீட்டையே அன்பு மயமாக்கும். அன்புள்ள வீட்டில் அமைதி தவழ்ந்து விளையாடும். 

 

அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்’ என்று விளக்கம் அளித்தார். 

 

அந்த டாக்டருக்கு புது மருந்து கிடைத்தது. 

 

உங்களுக்கு?! 

 

தாய் எத்தனை முத்தங்களை தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும், கணவரிடம் இருந்தும் பெற்றாலும் அத்தனை முத்தங்களும் பிரசவ அறை வலியில் காணாமல் போய்விடுகிறது. அங்கே பிறக்கும் குழந்தைக்கு அவள் கொடுக்கும் முத்தம் அதற்கு முந்தைய அனைத்து முத்தங்களையும் மறக்கடித்துவிடுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்