எதற்குத் தாலி பயன்படுகிறது?
15 மார்கழி 2014 திங்கள் 05:49 | பார்வைகள் : 9165
பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை.
அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது. தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரன் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது.
வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது? பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான்.
கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.
இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது! தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததேயாகும்.
பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150 வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.
இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21 வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல அளவு கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர்.
அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான். தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்கவேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது. நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம்.
பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.