Paristamil Navigation Paristamil advert login

காதல் வேதனை அளிக்குமா?

காதல் வேதனை அளிக்குமா?

10 மார்கழி 2014 புதன் 11:03 | பார்வைகள் : 9081


 காதல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று: அது தெய்வீகமானது, காலத்தால் அழியாதது, மரணத்தால் மறந்துவிடாதது, பிறவிக்குப் பிறவி தொடர்ந்து வருவது. இது காதலர்களின் பார்வை. இரண்டு: அது பொய்யானது. 

 
இளம் மனங்களை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் ஒரு மாயை அது. பெரும் துன்பத்தையும் பேரழிவையும் தரவல்லது. இது பெற்றோரது பார்வை. உண்மையில் இவை இரண்டுமே தவறான பார்வைகள். காதல் என்று அழைக்கப்படும் இந்த உணர்வு மிகவும் வலிமை வாய்ந்த ஆழ்மனச் சக்தி. மனிதன் வளர்ந்துகொண்டிருக்கிறான். 
 
அவனுடைய பரிணாம வளர்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் உணர்வு இந்த அக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறப்பைப் போன்றது இது. மனித மனத்தில் தன்னுணர்வு தீவிரம் அடைந்து சுயம் விழித்தெழும் முறைபாட்டில் இந்த உணர்வு பெரும் முக்கியத்துவம் கொண்டது. 
 
இந்த வலிமை மிகுந்த சக்தியின் ஆதிக்கத்திற்கு இளையவர்கள் ஆட்படும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் வல்லமை இன்றிக் குழப்பத்திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்வதாகக் கருதி அதை ஆட்சேபிக்கிறார்கள். 
 
காதல் வயப்பட்ட நிலையில் ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும் மகிழ்ச்சியும், மறுபுறம் ஆழமான வேதனையும் மாறி மாறி அலைக் கழிக்கும் போது இளைஞர்கள் தத்தளிக்கிறார்கள். சமூகப் பொறுப்பு சிறிதும் இல்லாமல், வெறும் வியாபாரம் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள திரைப்படங்களும், வியாபாரப் பத்திரிகைகளும் காதலை ஒரு வணிகச் சாதனமாகப் பயன்படுத்துகின்றன. 
 
இந்தப் பின்னணியில் காதலின் உண்மையான முக்கியத்துவம் அறிந்துகொள்ளப்படாமல் போகிறது. அக வளர்ச்சியில் காதல் வகிக்கும் பங்கு பற்றி இப்போது இருக்கும் புரிதல் முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்