பெண்களுக்கு கூந்தல் உதிர காரணங்கள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9575
இப்போது பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்வதற்கு, தொண்ணூறு சதவீதக் காரணம் ரத்தச் சோகைதான். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தச் சோகை குணமாவதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு முடி உதிர்வதற்கான மற்றொரு காரணம் மன அழுத்தம். தினமும் இருபது நிமிடங்களாவது ‘உங்களுக்கே உங்களுக்கான’ நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இருபது நிமிடத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், அன்றாட வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
பெண்களுக்கு முடி உதிர்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தைராய்டு, நீரிழிவு, ‘பி.சி.ஓ.டி.’ (PCOD) எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்கிறது. ஏழு நாட்களுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் வந்தால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற வேண்டும். இந்த ‘பி.சி.ஓ.டி.’ பிரச்சினை பெண்களிடம் இப்போது அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தப் பெண்கள், மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை வருவதற்கான காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபிசியா (Androgenic Alopecia) என்னும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையால்தான் எழுபது சதவீத ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். இது மரபு வழியாகவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் ஏற்படுகிறது.