வெற்றிக்குத் தேவை, புதிய கண்ணோட்டம்!
13 புரட்டாசி 2013 வெள்ளி 13:01 | பார்வைகள் : 10283
இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.
‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், 'இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி' என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.
அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.
பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.
இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.
ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.
ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.
காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.
ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.
ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.
அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.
எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.
இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.
இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. 'கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்'' ''ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்'' ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை 'பாசிட்டிவ்' சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.
அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி 'மெஷின் கன்'னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் 'முதல் ரேங்க்' எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.
ஆக, பொது விதிமுறை அனைவராலும் 'முதல் ரேங்க்' எடுக்க முடியாது என்பது தான்... இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம்.
ஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை... ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்... இயற்கையே இவ்வளவு 'சிம்பிள்'ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.
சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.
அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை.