உறவுகளின் அடிப்படையில் வாழ்க்கை ..............
3 புரட்டாசி 2013 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 10310
உறவுகளை காப்பாற்றுவது எப்போதுமே பெண்கள் கையில் தான் உள்ளது. உறவுகளின் அடிப்படையில் தான் வாழ்க்கை அமைகிறது. நம்முடைய எண்ணங்கள், கருத்துக்கள் அனைத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது மனித இயல்பு.
ஆனால் அதற்கு மாறாக அமைந்து விட்டால், எதிர்த்து போராடி நம்முடைய கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க முற்படுகிறோம். அதுதான் பிரச்சினையாகிறது. நல்ல குடும்ப அமைப்பு இருந்தால் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.
இன்றைய சூழலில் ஏற்படும் பல்வேறு மண முறிவுகளுக்கு காரணமாக இருப்பது சிதைந்த குடும்ப அமைப்புகளே. எவ்வளவுதான் மன முதிர்ச்சி, அனுபவம் உள்ள உறவுகளாக இருந்தாலும் வீட்டுக்கு விளக்கேற்ற வரும் பெண்ணைப் பார்த்து சந்தேகப்படவே செய்கிறார்கள்.
இந்தப் பெண் தங்களிடமிருந்து மகனை பிரித்து விடுவாளோ என்கிற பயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு இயல்பாக ஏற்பட்டு விடுகிறது. அந்த பயத்தின் வெளிப்பாடு பல்வேறு விதத்தில் வெளிவந்து உறவுச்சிக்கலில் கொண்டு போய் விட்டு விடுகிறது.
கணவனை நேசிக்கிறமாதிரியே புகுந்த வீட்டின் அத்தனை சொந்தங்களையும் நேசிப்பேன் என்பதை தன் அடுத்தடுத்த அனுதின செயல்களில் காட்டி விடுகிற பெண் மட்டுமே ஒட்டுமொத்த குடும்பத்தின் நேசத்துக்கும் உரியவளாகி விடுகிறாள். மனநல மருத்துவரின் கருத்துப்படி பெரும்பாலான பெண்கள் கணவனின் சொந்தங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை.
அதற்கும் மேல் ஒருபடி போய் அவர்களை வெறுக்கவும், கணவனை அவர்களிடம் இருந்து பிரித்துக் கொண்டு போகவும் செய்கிறார்கள். திருமண பதிவு மையங்களில் உள்ள பாரத்தில் 'உங்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் தேவை' என்ற இடத்தில் பல விஷயங்களை எழுதி கடைசியில் ‘மாமியார் இல்லாமலிருந்தால் கூடுதல் தகுதி.
அதேபோல நாத்தனார் இல்லாமல் இருப்பது சிறப்புத்தகுதி’ என்று குறிப்பிட்டிருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. திருமண மையங்களும் இந்த அநாகரீகமான கட்டளைகளை ஏற்றுக் கொண்டு திருமணப்பொருத்தம் பார்க்க ஒப்புக் கொள்கிறது.
இது ஒரு தவறான மனப்போக்கு என்று யாருமே எடுத்து கொள்வதில்லை. இதற்கு பெற்றோரும் சம்மதிப்பது தான் கொடுமை. இது ஒரு தவறான அணுகுமுறை. இதை திருமண பதிவாளர்கள் அனுமதிப்பது தார்மீக குற்றம். இப்படிப்பட்ட மனநிலையில் ஒரு வீட்டுக்கு வாழப்போகும் பெண்ணால் அந்த வீட்டுக்கு என்ன நன்மை விளைந்து விடப் போகிறது.
பிரச்சினைகளுக்கு அஸ்திவாரம் போட்டு அனுப்பி வைப்பதே பெற்றோர் தானே? பின் எப்படி அந்தப் பெண் அங்கே அமைதியாக வாழ முடியும்? ஒரு பெண்ணின் மண விலக்கின் பின்னணியில் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் பெற்றோர் தானே இருக்கிறார்கள். பின் ஏன் விவாகரத்துகள் பெருகாது?
ஒரு ஆணை வளர்த்து ஆளாக்குவதில் தாய்க்கும், சகோதரிக்கும் எந்த பங்கும் இல்லையா? திருமணத்திற்கு பின் அவர்கள் காணாமல் போய்விட வேண்டுமா...? நன்றியுணர்வு மிக்க எந்த ஆண்மகனுடைய மனதாவது இதை ஏற்குமா? சுமூகமான குடும்பங்களில் விவாகரத்துகள் தவிர்க்கப்படுகிறது.
நலம் விரும்பும் உறவுகள் விவாகரத்தை அனுமதிப்பதில்லை. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சரி, விவாகரத்து என்பது குடும்பத்துக்கு நேரும் ஒரு ஊனமாகவே கருதப்படுகிறது. மாமியார் இல்லாத ஒரு குடும்பவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எந்த ஒரு பெண்ணும் கனவு காணக் கூடாது. ஒரு ஆணை கட்டுப்படுத்தி சரியான பாதையில் இயக்கும் மிகப்பெரிய சக்தி மாமியார்.
அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை மனதில் கொண்டு மாமியாரை இடைஞ்சலாக நினைக்கும் பெண்கள், வாழ்க்கையின் சிக்கலான நேரங்களில் உதவிக்கு ஆளின்றி தவிப்பார்கள். டி.வி. சீரியல்கள் சுவாரசியமான கதைப் போக்கிற்காக மாமியார்களை மிக பயங்கரமாக சித்தரித்துக் காட்டும் மாபாதக செயலை செய்து வருகின்றன.
'மருமகள் என்பவள் என் அதிகாரத்திற்கு உட்பட்டவள்' என்ற எண்ணத்திலிருந்து மாமியார்கள் எப்போதோ விடுபட்டு விட்டார்கள். கல்வியறிவும், காலமும், அனுபவமும் அவர்களை எத்தனையோ உண்மைகளை உணரவைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறது.
இன்றும் பழங்கால மாமியார்களை மனதில் வைத்துக் கொண்டு, வாழப்போகும் பெண்கள் மனதில் பீதியை உண்டுபண்ணுவது, மாமியார் இல்லை யென்றால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமோ என்று சிந்திக்க தூண்டுவது...
இது எல்லாமே ஒரு வகை மனஊனத்தையே காட்டுகிறது. குடும்ப நிர்வாகம் என்பது பலவித ஏற்ற இறக்கங்களை கொண்டது. அதை ஒருநிலைப்படுத்துவது என்பது பொறுமையும், அனுபவமும் கொண்டவர்களால் மட்டுமே முடியும். ஒரு பெண் குடும்ப வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த உடனேயே மிகப்பெரிய பொறுப்புகளை தலையில் சுமந்து கொள்ள முடியாது.
அது அவளுடைய மகிழ்ச்சியை பாதிக்கலாம். இந்த நேரத்தில் மாமியார் என்ற உறவு நிச்சயம் தேவை. உடல் ஆரோக்கியம் குன்றும் போது தாயைப் போன்ற அரவணைப்பு தேவை. குழந்தைகளை வளர்க்க நல்ல துணை தேவை. தான் வீட்டிலில்லாத நேரத்தில் கணவனை பராமரிக்க மாமியாரை தவிர நம்பிக்கையாக வேறு யாரையும் நியமிக்க முடியாது.
எங்கிருந்தோ வரும் உறவுகளை தன் உறவுகளாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒரு பெண்ணுக்கு கணவனை நேசிக்கும் போதுதான் வரும். ஒரு பெண்ணின் தாய் ஒரு ஆணின் தாயை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வாழப்போகும் பெண்ணுக்கு தன்னுடைய இடத்திலிருக்கும் மற்றொரு தாயை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
மரியாதை மற்றவர் மனதை மகிழ்ச்சிப்படுத்தி பல விஷயங்களை மாற்றி விடும். ஒரு குடும்ப சூழலை தன்னுடைய மகிழ்ச்சிக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் பெண்களிடம் உண்டு. இதை பெண்ணுக்கு புரிய வைப்பது பெற்றோரின் கடமை. மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வரும் பொருளல்ல.
நம் எண்ணங்கள் தான் அதை உருவாக்க வேண்டும். கணவனின் உறவுகள் உங்களை புரிந்து கொள்ள சில காலமாகும். அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. தேவையற்ற விவாதங்கள் உங்களை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்திவிடும்.
அமைதியாக இருப்பது வெற்றியின் அடையாளம். நம்முடைய அமைதி மற்றவரை சிந்திக்க வைக்கும். நம்முடைய பரிவும், பாசமும் மற்றவரை நம் அருகே இழுக்கும். இதற்கான காத்திருப்பு சிலருக்கு வாரக் கணக்கில், சிலருக்கு மாதக்கணக்கில் ஆகலாம். கால வேறுபாடு தான் ஆகுமே தவிர, மனவேறுபாடு இதன் மூலம் களையப்படுவது நிச்சயம்.