பெண்களின் இனிய இல்வாழ்க்கைக்கு...!
8 வைகாசி 2013 புதன் 07:00 | பார்வைகள் : 11475
பெண்கள் படித்து முடித்து வேலைக்கு போய் சம்பாதித்து, பணம் சேர்த்து, வீடுவாங்கி... இப்படி நீண்டுகொண்டே போகிறது அவர்களுடைய வாழ்க்கை. அது சரி...திருமணம் எப்போது? கல்வி, உத்தியோகம், பணம் இதெல்லாம் வாழ்க்கைக்கு தேவைதான்.
அதற்கென்று காலகட்டங்கள் உள்ளன. அதையெல்லாம் வசமாக்கிக்கொண்டபிறகும் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேபோவது அவர்களுடைய வருங்காலத்தையே கேள்விக் குறியாக்கி விடாதா? பால்ய விவாகம் எப்படி தவறானதோ, அப்படியே முதிர் விவாகமும் தவறானது.
அவர்கள் பெரும்பாலும் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். காலதாமதமாக ஆகும் திருமணத்தால், குழந்தைப்பேறும், சுகப் பிரசவமும் சிரமமான விஷயம். இதையெல்லாம் மனதில் கொண்டு காலத்தோடு திருமணம் செய்து கொள்வதே சரியாகும். 'பருவத்தே பயிர் செய்' என்ற கூற்றிற்கேற்ப பருவம் என்பது முக்கியம்.
அதேபோல் காலம் கடந்த திருமணம் நல்ல பலனைத் தராது. பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத விஷயங்களும், ஆண்களுக்கும் பெண்களிடம் பிடிக்காத பல விஷயங்கள் இருக்கலாம். ஒருபோதும் அது திருமணத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. அவற்றை திருமணத்திற்கு முன்பே மாற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதேநேரம் தைரியம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் முரட்டுத்தனங்களை ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது, பல ஆண்களுடன் பழகுவது, ஊர் சுற்றுவது இதெல்லாம் பாதுகாப்பான விஷயமே அல்ல. பணிவான பெண்களே எல்லோரையும் கவர்கிறார்கள்.
இனிமையான பேச்சு, சாந்தமான சுபாவமே ஆண்களுக்கு பிடித்த விஷயம். பெரிய வீராங்கனை என்ற எண்ணத்தில் ஆண்களை தூக்கி எறிந்து பேசுவது. நேரம் காலம் இல்லாமல் நண்பர்களுடன் அரட்டையடிப்பது இதெல்லாம் திருமணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்து விடும். மேடையில் பலர் முன் பாராட்டப்படும் பெண்கள் கூட திருமணம் என்ற வளையத்திற்குள் வர தயங்குகிறார்கள்.
ஆண்களை விட நாங்கள் புத்திசாலிகள், அறிவாளிகள் என்று அலட்டிக் கொள்ளும் பெண்கள் யாரையும் கவரமாட்டார்கள். அறிவு என்பது நல்ல பண்பின் அடித்தளத்தில் அமைக்கப்பட வேண்டியது. அகங்காரம், ஆணவம் அறிவை ஆளக்கூடாது. அது முற்றிலும் மன அழுத்தத்தை தரும். திருமணம் என்ற பந்தமே அன்பின் அடித்தளத்திலும் விட்டுக் கொடுக்கும்
மனோபாவத்திலும் அமைவது. அப்படிப்பட்ட மனப்பக்குவம் தான் அவர்களை உயர்த்தும். இன்றைய பெண்களிடம் கல்வி, தொழில், பணம் எல்லாமே இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாதது போல தோன்றுகிறது. அவர்களால் வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியவில்லை. எதையுமே தாக்குப் பிடிக்கும் மனப்பக்குவம் அவர்களிடமில்லை.
அழகாக ஆரம்பித்த வாழ்க்கையை பாதியிலேயே அலங்கோலமாக முடித்துக் கொள்கிறார்கள். காரணம் எதிலுமே ஒரு பதட்டம், பொறுமையின்மை, எதுவும் தனக்கு சாதகமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அதீத கோபம் இவையெல்லாம் வாழ்க்கையை சிதறடித்து விடுகிறது. வாழ்க்கையை மேன்மைபடுத்திக் கொள்ளத்தானே அறிவு.
திருமண வாழ்க்கையை சிதைத்துக் கொள்ளவா உங்கள் அறிவு பயன்பட வேண்டும்? வாழ்க்கையின் போக்கு எப்படி இருந்தாலும் அதை வகையாக சீரமைத்துக் கொள்ளத் தெரிந்தவள் தான் அறிவாளிப் பெண். சுயமரியாதை என்பது அனைவருக்கும் தேவை. அதே போல அடுத்தவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை தான் நம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள பயன்படும்.
நாம் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் நம் குடும்பத்தில் உள்ளவர்களையும், நண்பர்களையும் மதிக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள். அந்த மரியாதை அவர்களிடம் அன்பாக திரும்பி வரும். அந்த அன்பு அவர்களுடைய வாழ்க்கையை பாதுகாக்கும். வெளியிலிருக்கும் நபர்களும், வீட்டிலிருக்கும் உறுப்பினர்களும் ஒரே மாதிரி பழக முடியாது.
வீட்டில் நாம் பல விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டி வரும். சுயமரியாதை என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் மரியாதை. அந்த வகையில் நம்மிடமிருந்து வரும் சொற்கள், அதை தொடர்ந்து வரும் செயல்கள், தூய்மையாக இருந்தால் தான் சுயமரியாதையை காத்துக் கொள்ள முடியும். வார்த்தைகளில் அன்பும், அனுசரிப்பும், தன்மையும், மென்மையும் கலந்திருக்க வேண்டும்.
அது நம் கல்விக்கும், திறமைக்கும் கொடுக்கும் மரியாதை. தேவையற்ற வீண்விவாதம் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. வீண் விவாதத்தால் நியாயங்கள் எடுபடாது. அதனால் சண்டை தான் உருவாகும். உஷ்ணமான நேரத்தில் உருவாகும் வார்த்தைகள் வேறு திசையில் சென்று வேறு மாதிரியான பிரச்சினைகளை கொண்டு வரும்.
நம் மனம் ஒத்துக் கொள்ளாத விஷயமாக இருந்தால் சிறிது அமைதி காத்து பின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும் நியாயத்தை எடுத்துச் சொல்லலாம். நாம் சொல்லும் நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து பேசவேண்டும். இதில் கொஞ்சமேனும் கோபம், எரிச்சல், குமுறல், பழைய காயம் தெரிந்து விடக்கூடாது.
இக்கால பெண்களுக்கு அந்த அளவு பொறுமை இல்லை என்பது தான் இதில் சோகம். எதிலும் ஆண்களை மீறி செயல்பட வேண்டும் என்ற நினைப்பு, அவர்களுக்கு எரிச்சல் மூட்டும் விதத்தில் பதட்டமான பேச்சு, மற்றவர்களை எப்போதும் குறைகூறும் மனப்போக்கு இதெல்லாம் பல பிரச்சினைகளை வீட்டுக்குள் கொண்டு வரும். இதை ஆண்கள் விரும்பமாட்டார்கள்.
தன் மனைவியால் தன்னை சுற்றியிருப்பவர்கள் சொல்லாலும், செயலாலும் பாதிக்கப்படுவதால், மேலும் பிரச்சினைகள் உருவாகலாம் என்று பயப் படுவார்கள். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் தான் சிறு நெருப்புப் பொறி மாதிரியான வார்த்தைப் பிரயோகம் கூட பெரும் நெருப்பாகி உறவுநிலை கருகிப்போக காரணமாகி விடுகிறது.
தன் மனைவி எப்போதும் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள். அதற்கு அழகும், படிப்பும், பணமும், மட்டும் போதாது. நல்ல பண்பும் அவசியம். பலராலும் திறமைசாலி என்று பாராட்டப்படும் பெண்களைக் கூட சிற்சில விஷயக்குறைபாடுகளால் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.
சிக்கிரம் டென்ஷனாவது, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வது, அடிக்கடி அழுவது இதெல்லாம் ஆண்களுக்கு பிடிக்காது. தங்களை பலசாலிகள் என்று காட்டிக் கொள்ளும் பெண்கள் இப்படிப்பட்ட விஷயங்களால் பலவீனமாகி விடுகிறார்கள். ஒரு சின்ன விஷயத்தை கூட சுயமாக சிந்தித்து தீர்வு காணமுடியாத பெண்கள் திருமணத்திற்கு சற்றும்லாயக்கில்லாதவர்கள்.
எல்லா விஷயத்தையும் சுற்றியிருக்கும் எல்லாரிடமும் சொல்லி தீர்வு காண நினைப்பது கையாலாகாத்தனம். அலுவலகத்திலும், வீட்டிலும் வெளியிலும் புலம்பிக் கொண்டே இருக்கும் பெண்கள், தானும் நிம்மதியாக இல்லாமல் மற்றவரையும் நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியாது. திருமண வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பது.
சுமைகளைபகிர்ந்து கொள்வது. ஒருவர் குறைவில் மற்றவர் நிறைகாண்பது. இதனால் இல்லறம் இனிக்கும். நல்லறம் செழிக்கும். தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்று தீர்மானிக்கத் தெரியாத பெண்கள் எப்போதும் ஒரு குழப்பத்துடனே இருப்பார்கள். இதற்கு பேராசையும் ஒரு காரணம். தனக்கு எல்லாவற்றையும் விட சிறந்தது வேண்டும் என்ற தேடல் கடைசி வரை நல்ல நிர்ணயத்தை எடுக்க விடாது.
இப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் மணமகன் விஷயத்திலும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். இப்படிப்பட்ட பெண்களால் அத்தனை சுலபத்தில் மணமகனை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் சரிவர தீர்மானிக்க முடியாது. தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும். தனக்கு மட்டுமே எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற சுயநலம் ஆண்களை வெறுப்படையச் செய்யும்.
பெண் என்பவள் தியாகத்தின் பிரதிபலிப்பு. தன் தாயின் இடத்தில் ஒரு மனைவியை நிறுத்திப்பார்க்க நினைக்கும் ஆண்களுக்கு ஒருபோதும் சுய நலக்கார பெண்களை பிடிக்காது. பெண்கள் தங்களுக்குள் சில திறமைகளை வளர்த்துக் கொள்ள கல்வியைத்தேடி ஓடுகிறார்கள். தவறில்லை. ஆனால் பெண்ணிற்கே உரிய இயல்பான நற்குணங்களை, மாண்பை, நல்ல பண்புகளை விட்டுவிடக் கூடாது.
மலர்களின் சிறப்பே நறுமணம் தானே மணமில்லாத மலர்களை யாரும் விரும்புவார்களா? பண்பில், அன்பில், பொறுமையில், நிதானத்தில், சகிப்புத்தன்மையில் தங்களை உரு வாக்கிக் கொள்ளும் பெண்களே மண வாழ்க்கையிலும் மணக்கிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் சிறக்கிறார்கள்.