மனஉளைச்சல் ஏன் ?
27 தை 2014 திங்கள் 07:12 | பார்வைகள் : 10128
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று மனஉளைச்சல்’.. மனஉளைச்சல்’ என்று தவித்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை தந்த விரும்பத்தகாத பரிசுகளுள் ஒன்று இந்த மனஉளைச்சல்’எனப்படும் 'டென்ஷன்' . முன்பு எப்போதாவது என்று இருந்த மனஉளைச்சல்’பிறகு அவ்வப்போது ஆகி, இன்று அடிக்கடி என்றாகிவிட்டது.
மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடி இது. இதிலிருந்து நவீன மனிதனால் முற்றிலும் விடுபட முடியாது. ஆனால் மனஉளைச்சலை’ மேலாண்மை செய்ய முடியும். அதற்கு, மனஉளைச்சல்’ என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்...
மனஉளைச்சல்’ என்பது ஒரு பொருளின் இறுக்கத்தைக் குறிக்கும். உலகில் சில பொருள்கள் இயல்பில் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். உலோகங்கள், மரங்கள், கற்கள் போன்றவை அப்படி இறுக்கமாக இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். காகிதம், நூல், செடி கொடி போன்றவை நெகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கலாம்.
சில பொருட்கள் இரண்டு அம்சங்களும் கொண்டவை. எடுத்துக்காட்டு, களிமண் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பொருளியல் பண்புகளான இவை, நம் உடலுக்கும் பொருந்தும். நமது உடல் இறுகு பொருள்களும், நெகிழ் பொருள்களும் கலந்த கலவை. எலும்பு, தசை நார், தோல், ரத்தக் குழாய் ஆகியவற்றின் கூட்டுப்படைப்புதான் நம் உடம்பு.
இவற்றில் சில, நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில, இறுக்கமாக இருக்க வேண்டும். நெகிழ்ச்சி உறுப்புகள் இறுகக் கூடாது. அதேபோல் இறுகு உறுப்புகள் நெகிழக் கூடாது. எலும்பு நெகிழ்ந்தால் எலும்புருக்கி நோயாகவும், ரத்தக்குழாய் இறுகினால் ரத்த அழுத்தமாகவும் ஆகும்.
இந்தப் பண்பு மனதுக்கும் பொருந்தும். நமது மனம் இளகியும், இறுகியும் இருக்க வேண்டும். நோக்கத்துக்கு ஏற்ப அது அமையும். பசி, தாகம் எடுக்கும்போதும், உறக்கம், பாலுணர்வு உந்தும் போதும் மனம் இறுகிவிடும். ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். மாறாக, எதை உண்பது, எங்கே படுப்பது எனும் போது இளக வேண்டும்.
விலங்குகள் அப்படித் தான் வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு இயற்கையாகவே இறுகுதன்மை உள்ளது. இது ஆபத்தில்லாதது. மனிதனிடம் செயற்கை இறுகுதன்மையே அதி கமாக உள்ளது. இதைத்தான் சாப்பிட வேண்டும், இங்கேதான் படுக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களிடம் மிகுதியாக இருக்கிறது.
அப்படி அமையாதபோது மனஉளைச்சல்’ ஆகிறான். எனவே மனஉளைச்சல்’என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. அப்படி ஏற்படுத்திக்கொள்ள சமூகமே கற்றுக்கொடுக்கிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும்போது மனஉளைச்சல்’ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, அந்த எண்ணத்தின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவல். மற்றொன்று, சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாமை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்த வேலையை செய்ய முடியாமல் போனாலோ, எடுத்த பணியை முடிக்காமல் போனாலோ நிச்சயம் மனஉளைச்சல்’தான்.
யாரேனும் நமக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும் மனஉளைச்சல்’ ஏற்படும். அச்சூழலுக்கு, இரு மனங்களின் நெகிழ்ச்சிக் குறைபாடே காரணமாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மனஉளைச்சல்’பட்டியல் கட்டாயம் இருக்கும். அவற்றை நாம் முழுவதும் போக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது.
மாறாக, அவற்றால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். நேரத்தை திட்டமிடுவது போன்றவை மனஉளைச்சல்’ தவிர்க்கும். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற மனஉளைச்சலை’ தவிர்த்தாலே, பெரும்பாலும் நிம்மதி தான்!