Paristamil Navigation Paristamil advert login

வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ

வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ

1 தை 2014 புதன் 10:43 | பார்வைகள் : 9721


 அகிம்சையை எல்லோரும் போற்றுகிறோம். அதை பரப்பவும் தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஆனால் வன்முறைதான் நாம் விரும்பாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் வன்முறையால் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். 

 
வன்முறை எங்கு ஆரம்பிக்கிறது? எங்கு முடிகிறது? என்ற கேள்வியை கேட்டால், இரண்டிற்கும் பதில் ஒன்றுதான்! வன்முறை தனிமனிதனான நமது மனதில்தான் ஆரம்பிக்கிறது. நமது மனதில்தான் முடிகிறது. ஆத்திரம், பழி உணர்ச்சி, காமம், கோபம், பேராசை, அகங்காரம் போன்ற வடிவங்களில் நம் மனதில் அடி ஆழத்தில் அந்த வன்முறை விதை விழுகிறது. 
 
அது வளர்ந்து, வேரூன்றி, விஸ்வரூபம் எடுக்கும்போது போராகவும், போராட்டமாகவும், மோதலாகவும் வெளிப்படுகிறது. வன்முறை என்றாலே அது வெளியே இருந்து மற்றவர்களால் நமக்கு தரப்படும் வலி நிறைந்த துன்பம் என்று பரவலாக நினைக்கிறோம். 
 
ஆனால் தனக்குத்தானே பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டோ, தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன என்று தெரியாமலோ இன்று பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தனக்குத்தானே இப்படிப்பட்ட கோர முடிவினை தேடிக்கொள்வதும் பெரும் வன்முறைதான். இதில் நாம் இன்னும் விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறோம். 
 
அதனால்தான் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வன்முறையாளர்களால் மற்றவர்கள்தான் பாதிக்கப்படுவதாக நாம் நினைக்கிறோம். உண்மையில் யார் வன்முறையில் ஈடுபடுகிறாரோ அவர், முதலில் தனக்குத்தானே துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பாதிக்கப்படுகிறார். 
 
வேதனையில், துக்கத்தில், வலியில் இருக்கும் அவர் வன்முறை மூலம் மற்றவர்களுக்கும் அந்த வலியை, துக்கத்தை கொடுக்க முன்வருகிறார். நாம் கோபமாக இருக்கும்போது மற்றவர்கள் மீதும் கோபத் தைக்காட்டி எரிந்துவிழுவோம். முதலில் அந்த கோபம் நம்மை பாதிப்பதால்தான் எதிரியிடம் அதை கொடுக்க நினைக்கிறோம். 
 
கோபம் ஒரு முட்செடி. அது நமக்குள் இருக்கும் வரை நம்மை குத்திக்கீறி வலியை தந்துகொண்டேதான் இருக்கும். கோபம் அளவுக்கு மீறி நம்மிடம் இருந்துகொண்டே இருந்தால் அது நம்மை அறியாமலே வன்முறைக்குள் தள்ளிவிடும். 
 
வன்முறை என்பது அடுத்தவரை அடிப்பது மட்டுமல்ல, அடுத்தவரைப் பற்றிய வன்ம உணர்வு நம் மனதுக்குள் வந்துவிட்டாலே அது வன்முறைதான். நமது எண்ணங்களில் வன்மம் இல்லாமல் இருந்தால்தான், நம்மால் அகிம்சையின் ஆதரவாளராகவும், வன்முறைக்கு எதிரானவராகவும் செயல்பட முடியும்.
 
‘அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும்’ என்பார்கள். இப்போது நாம் அதில் கில்லாடிகளாகி, அகத்தில் வன்மம் இருந்தாலும் முகத்தில் அன்பு நிறைந்தவர்கள்போல் சிரிப்பு முலாம் பூசத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதுபோல் ‘பேசும் கலை‘யிலும் வல்லவர்களாகிவிட்டோம். 
 
‘ஆர்ட் ஆப் கம்யூனிகேஷன்’ என்றும் ‘கம்யூனிகேஷன் ஸ்கில்’ என்றும் மேடை போட்டு பலர் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்க, அதன் மூலம் நாம் இனிமையாக, மரியாதையாக பேச கற்றுக்கொள்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் கசப்பு, கடுமையை மனதில் வைத்துக்கொண்டு இனிமையை வார்த்தைகளில் (மட்டும்) வெளிப்படுத்தவும் தெரிந்துகொள்கிறோம். 
 
கசப்பும், கடுமையும் மனதில் இருந்தால் அதுதான் வன்மம் கலந்த எண்ணங்களாக உருமாறுகிறது. ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம்போல், மனிதர்களின் சிந்தனை, செயல் அத்தனைக்கும் அஸ்திவாரம் எண்ணங்கள்தான். ஆனால் அந்த எண்ணங்களின் முக்கியத்துவத்தை நாம் உணராமல் இருக்கிறோம். 
 
வார்த்தைகளில் இனிமை பூசினாலும், செயல்களில் மென்மைகாட்டினாலும், எண்ணங்களில் வன்மம் இருந்தால், அந்த வன்மம் அதிகரித்துக்கொண்டேதான் செல்லும். கண்களுக்கு தெரியாது. அடுத்தவர்களால் கண்டு உணரவும் முடியாது என்பதால், நமது எண்ணங்களைப் பற்றி பெரும்பாலும் நாம் கவலைப்படுவதில்லை. 
 
மற்றவர்களை குறைசொல்வது நமக்கு ரொம்பவும் பிடிக்கிறது. மற்றவர்களது நடத்தையை உற்றுப்பார்க்கிறோம். அவர்களது நடை, உடை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் உற் றுப்பார்த்து குறை கண்டுபிடிக்கிறோம். 
 
எப்போது ‘இன்னொருவர் செய்வது தவறு’ என்று நினைக்கிறோமோ அப்போதே அவரைப் பற்றிய தவறான எண்ணம் நமக்குள் உருவாகிவிடும். அடுத்து அவரிடம் போய், ‘நீ அப்படி செய்யாதே..! இப்படி பேசாதே..!’ என்று மிக உரிமையோடு சொல்வோம். அவரது நலனுக்காகத்தான் சொல்கிறோம் என்று கூறிக்கொண்டு வார்த்தைகளில் இனிமையை காட்டுவோம். 
 
ஆனால் உண்மை என்னவென்றால், அவரது நடத்தையும், செயலும் தவறு என்ற எண்ணத்தை எப்போது உருவாக்கி னோமோ அப்போதே நமது விமர்சன வாள் அவரை நோக்கி பாய்ந்து அவரிடம் காயத்தை எண்ணரீதியாக உருவாக்கிவிடுகிறது. அது தான் உண்மை. 
 
இப்படி ஒருவரைப் பற்றி நாம் உருவாக்கும் தவறான எண்ணங்களின் தொகுப்புதான் வன்மமாக மாறுகிறது. அதுவே வன்முறையின் தொடக்கமாகிவிடுகிறது. அந்த வன்முறை எண்ணங்களை அகற்ற நமக்கு தேவை, ‘அகிம்சை’! ‘அகிம்சா பரமோதர்மா’ என்பது மகாபாரதத்தில் இருக்கும் மகாவாக்கியம். 
 
அகிம்சைதான் அனைத்திலும் உயர்ந்த தர்மம் என்பது இதன் அர்த்தம். அகிம்சை என்பதன் உள்அர்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டால்தான் அதை நடைமுறைப்படுத்த முடியும். ‘எந்த ஜீவராசிக்கும் துன்பம் கொடுக்காமல் இருப்பதுதான் அகிம்சை’ என்று பொதுவாக கருதப்பட்டு வருகிறது. 
 
அப்படி கருணையுடன் நடந்துகொண்டால் அதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கும்? என்ற இன்னொரு கேள்வி எழுகிறது. அகிம்சையை நாம் கடைபிடித்தால் அடுத்த ஜீவராசிகளுக்கு பலன் கிடைக்கும் என்பதைவிட, நமக்கு மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். 
 
நாம் அகிம்சையாளராக மாறவேண்டும் என்றால், முதல் கட்டமாக நமக்குள் இருக்கும் துக்கத்தை அகற்றவேண்டும். மீண்டும் நமக்கு நாமே துக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். அதற்காக சூழ்நிலை, செயல், வார்த்தை, மனிதர்கள் யாராலும் நமக்கு துக்கம் நேராத வண்ணம் நமது எண்ணங்களை வலிமைப்படுத்த வேண்டும். 
 
நாம் நம்மைத் தாக்கும் ஆயுதங்கள் மற்றவர்களிடம் இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்மை தாக்குவதற்கு மற்றவர்கள் ஆயுதம் கொண்டுவர வேண்டிய தேவையில்லை. நம்மைக்கொல்ல நாமே ஆயுதங்களை உருவாக்குகிறோம். 
 
குற்றஉணர்வு, ஏமாற்றம், விரக்தி, ஆத்திரம், பழிவாங்கும் உணர்வு போன்றவைதான் நமக்குள்ளே இருந்து நம்மை கொல்லும் ஆயுதங்கள். அவை நமக்குள்ளே இருந்து நம்மை தொடர்ந்து சித்ரவதை செய்துகொண்டே இருக்கும். 
 
சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், வாழ்க்கையில் எது நடந்திருந்தாலும் தன்னையே மன்னிக்க முடியாதவர்களால், மற்றவர்களை மன்னிக்க முடியாது. அதனால் முதலில் நம்மை நாமே மன்னிக்க கற்றுக்கொள்ளவேண்டும். 
 
நடந்து முடிந்த மனக்காயங்களை தினமும் நினைத்து அந்த ரணத்தை ஆறாமல் வைத் துக்கொண்டு, அந்த வலியை அனுபவித்துக்கொண்டே, அதற்கு காரணமானவர்களை சபித்துக்கொண்டிருக்கக்கூடாது. நம்மிடம் இருக்கும் துக்கத்தை களைந்து, வலியை போக்கி அகிம்சையை உருவாக்க பிரம்ம குமாரிகள் இயக்கம் பல்வேறு கருத்தரங்குகளை நடத்திவருகிறது. 
 
அது மக்களிடம் மகிழ்ச்சி நிறைந்த மனமாற்றங்களை உருவாக்கி வருகிறது. இந்த உலகம் அமைதிபூங்காவாக இருக்கவேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவருக்குள்ளும் அமைதிபூக்கவேண்டும். அதற்கு அடிப்படையாக அகிம்சை மலரவேண்டும்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்