மரத்தின் அருமை!
7 தை 2023 சனி 13:48 | பார்வைகள் : 8247
உயிரின் மதிப்பை உணரவில்லை ஓர்
உண்மையான உயிரின் மதிப்பை
நான் உணரவில்லை!
தாலாட்டு பாடி என்னைத்
தூங்கவைக்க தாய்க்கு நிழல்கொடுத்த
உயிர் அது!
கோடைக் காலத்தில் நான்
ஓடியாடி விளையாடி களைப்படைந்து
ஓய்வெடுக்க ஒதுங்கியபோது
தாயாக இருந்து என்னை
தன்நிழல் மடியில் ஏந்திக் கொண்ட
உயிர் அது!
பசியென்று வந்த போது தென்றல்
காற்றில் அசைந்து நல்ல
கனியை தந்த வள்ளல்
தன்மை நிறைந்த
உயிர் அது!
கிளைகளிலே தூரிக் கட்டி
ஊஞ்சல் ஆடிய போது
கண்ணே மெல்ல ஆடு என்று
மனதோடு பேசிய
உயிர் அது!
இன்றைக்கு காலையில் எழுந்து
பார்த்த போது
டொக் டொக் என்று அதன்
உடலில் வெட்டுகின்ற சப்தம் கேட்டேன்;
மனது கலங்கியது என்
தாயை நூறு துண்டங்களாய்
கூறுபோடுவது போல் உடலில் நடுக்கம்
“கிழட்டு கட்டை சாஞ்சு போச்சு
அடுப்பெரிக்க உதவும”; மென்று கூறினார்கள்
இறந்து போன தாயின் உடலை
நெருப்பிலே வாட்டுவது போலே
எண்ணத்தி லெல்லாம் தோன்றியது!
இனிமேல் அந்த உயிரிடம்
மனதோடுபேச முடியாது என்று நினைத்தேன்
அதன் அடிக்கட்டை எச்சமாயிருந்து என்
நினைவில் வந்து வந்து செல்கிறது!
அடிபட்டபோது வெட்டச் சொன்ன என்னை
திருப்பி கேட்டு சிரிப்பது போலிருந்தது
சிறுவயதில் ஓர் உண்மையான
உயரின் மதிப்பை உணரவில்லை
இப்போது உணர்கிறேன் சுவாசிக்க
நல்ல காற்று இல்லாத போது!