Paristamil Navigation Paristamil advert login

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

14 மார்கழி 2022 புதன் 14:20 | பார்வைகள் : 8953


அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

 
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.
 
புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.
 
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.
 
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.
 
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.
 
புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.
 
மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.
 
புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.
 
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.
 
பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.
 
1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.
 
10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.
 
20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.
 
பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.
 
விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.
 
புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.
 
இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.
 
நீதி: கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்