அம்மாவும் பிள்ளைகளும்
14 ஆனி 2022 செவ்வாய் 17:40 | பார்வைகள் : 17290
இரத்த சிவப்பாய்
அடிவானம்
சில விநாடிகளில்
சூரியனை
பெற்றெடுத்து
உலகிற்கு காட்டுவதற்கு
தயாராகிறாள்
முளைத்த முப்பது
நிமிடங்களுக்கும்
தானே தனியாய்
இயங்க ஆரம்பித்து
விட்டான்.
தவழ்ந்து தவழ்ந்து
வானத்து தாய்
உடல் மீது
நகர்ந்து சென்றதால்
அவன் உடல்
வெளிப்படுத்திய
வெப்பம்
கீழிருப்பவர்களை
தகிக்கத்தான் வைக்கிறது
தாங்கமுடியாமல்
அவனை பெற்றெடுத்த
வானத்து தாயை
அண்ணாந்து பார்க்க
அவள் மனமிரங்கி
மறுபுறமாய்
அவனுக்கு விளையாட்டு
காட்டி கீழே
தவழ்ந்து வர
செய்கிறாள்
தவழ்ந்து தவழ்ந்து
கீழ் வந்தவனை
சட்டென உள்ளிழுத்து
தனது அடிவயிற்றில்
புதைத்து கொள்கிறாள்
அவனால் உண்டான
தகிப்பை குளுமை
படுத்த
மறுபுறமாய்
நிலவை பெற்றெடுத்து
தனது மேனியில்
தவழ அனுப்புகிறாள்
அவனும் தமையனை
போல தவழ்ந்து
மேலேற
அவன் உடல்
குளுமை கீறங்கி
சாந்தப்படுத்த செய்கிறது
வானத்து அம்மாவும்
இந்த இரு
சகோதரர்களின்
விளையாட்டு
எத்தனை
நூற்றாண்டுகளாய்
நடந்து கொண்டிருக்கிறதோ?