தேயிலை
31 வைகாசி 2023 புதன் 09:25 | பார்வைகள் : 7842
பார்க்கும் கண்கள் எதற்கும் என்றும் !
பசுமை வார்க்கும் தேயிலை
பார்த்து பார்த்து வளர்ப்பவன் வாழ்வில் !
பசுமை வார்ப்ப தேயிலை
ஈர்க்கும் அழகை வைத்தே இருக்கும் !
இயற்கை பூவனம் தேயிலை
யார்க்கும் மனதில் உற்சா கத்தை !
யாசகம் போடும் தேயிலை
அடிமை கால வாழ்விற் கன்று !
அடிக்கல் நாட்டிய தேயிலை
மிடியைத் தீர்க்கும் வழியை காட்ட !
மறந்து போன தேயிலை.
காடாய் இருந்த மலைகள் எங்கும் !
கால்கள் ஊன்றிய தேயிலை !
மாடாய் உழைத்து மாண்ட பரம்பரை !
மாற்றிட மறுத்த தேயிலை
நாடாய் இருக்க காடுகள் எங்கும் !
நல்வழி அமைத்த தேயிலை
வீடாய் லயங்கள் என்னும் குடிசை !
விதைத்து விட்டத் தேயிலை
கடலது தாண்டி இலங்கை வந்தோர் !
கண்ணாய் வளர்த்த தேயிலை
உடல்வளம் என்னும் உழைப்பத னாலே !
உயர்த்தி விட்ட தேயிலை
கள்ளத் தோணி என்றே அழைக்க !
காரணம் ஆகியத் தேயிலை
உள்ளம் இருக்கும் ஏழை வாழ்வை !
ஊமை ஆக்கியத் தேயிலை
சொல்லச் சொல்லச் சோகம் தீரா !
சோதனைக் கொடுத்த தேயிலை
செல்வர் வாழ எம்மவர் இன்னும் !
சிந்திடும் உதிரமே தேயிலை