நீயும் நானும் சகோதரிகள்
2 புரட்டாசி 2020 புதன் 12:51 | பார்வைகள் : 9590
உன் அழுகையின் குரல்
கேட்டு,மகிழ்வுடன்
உன் தந்தை என்னை
நட்டு வைத்தார்,இரண்டுமே
என் குழந்தையென்று, உன்னை
வளர்ப்பது போலே என்னையும்
வளர்த்தவர் அவர், உன்னை
தொட்டு தடவி மகிழ்வது
போலே, என்னையும் தொட்டு
தடவி வளர்த்தார்.என்
உடலில்,ஏற்படும் சிலிர்ப்பை
வெளியில் சொல்ல எனக்கு
வாயில்லை.!உன்னுள் ஏற்பட்ட
பருவ மாற்றம் என்னுள்ளும்
ஏற்பட்டதை என் தந்தைக்கு
தெரிவிக்க பூக்களாய் பூத்து
காட்டினேன்,உன்னை வளர்க்க
அவர் பட்ட சிரமம்
எனக்கு மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு துயரும் என்னிடம்
சொல்லி சொல்லி புலம்புவார்
மெளனமாய் கேட்பதை தவிர
எனக்கு என்ன வேலை!
அவர் தோளுக்கு மேல்
வளர்ந்திருந்தும் என்னால் பேச
முடியவில்லை! இலைகளாலும்
பூக்காளாலும் சொரிய வைத்து
ஆறுதல் படுத்துவேன்.உன்
திருமணத்தின் ஊர்வலத்தை கண்டு
மகிழ்ந்தவள், இந்த வீட்டை
விட்டு பிரிந்தபோது மெளனமாய்
அழுது நின்றவள்,உன் அப்பா
இல்லை ! என் அப்பா
இறந்த போது நான் அழுத
அழுகை யாருக்கு புரிந்திருக்கும் !
காலங்கள் தான் எவ்வளவு
வேகமாய் நகர்கின்றன!உன்
தோளுக்கு மேல் வளர்ந்த
பையனுடன் என் அருகில்
நின்று என்னை அண்ணாந்து
பார்த்து! மரம் நல்லா
பெரிசாயிடுச்சு, வெட்டிடலாம், பேசிய
என் சகோதரியை வருத்தத்துடன்
பார்த்தபொழுது !
அம்மா உனக்கு மனசாட்சி
இருக்கா? தாத்தா நீ
பிறந்தப்ப நட்டு வச்ச
மரம், இதைய் போய்
வெட்ட சொல்றியே? நான்
இருக்கும் வரை இந்த
வேலை செய்யவிடமாட்டேன் !
ஆசையாய் என்னை தடவியவனை
அதே சிலிர்ப்புடன் என்
இலைகளையும், பூக்களையும் சொரிந்தேன்,!
என் தந்தை இன்னும்
உயிருடன் இருக்கிறார்.