என் உயிர் பிச்சுத் தின்பவளே...!!
16 ஆவணி 2021 திங்கள் 10:23 | பார்வைகள் : 10378
சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான்
நெஞ்சில் பாதம் பதிப்பாய்..
மீசைப் பிடித்திழுத்து – எனக்கு
வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்..
எச்சில்’ வேண்டாமென்பேன்
வேண்டுமென்று அழுது
வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய்,
வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்..
கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய்
முத்தத்தில் முழு கோபத்தையும்
தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட
எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்..
புதுத்துணி வாங்கிவந்தால் படுக்குமுன் உடுத்திப்பார்ப்பாய்
கொடுக்காமல் எடுத்துவைத்தால் பீஜ் பீஜ்பா என்பாய்
ஆங்கிலம்கூட உன் பேச்சில் பிசுபிசுக்கும், திகட்டாதத்
தேனிற்குள் உன்பேச்சு எப்போதுமே யினிக்கும்..
கோபம் வந்தால் அடித்துவிடுவேன்
நீயா அடித்தாய் என்னை என்றுப் பார்ப்பாயா
அல்லது நீயே அடிதுவிட்டாயே என்றுப் பார்ப்பாயா
தெரியாது,
ஆனால் உன் பார்வையின் வலியினால்
எனக்குள் இரத்தம் சொட்டும்..,
அடித்ததை எண்ணி எண்ணி
ஆயுளில் அந்தநாள் இல்லாமலே குறைந்துபோகும்..
நான் தூங்கும் நல்லிரவுவரை நீயும் விழித்திருப்பாய்
தூக்கம் வரவில்லையென்பாய்
பொம்மை பேசுகிறது பேசுகிறேன் என்பாய்
தண்ணீர் வேண்டும் என்பாய்
பாதிக் கண்ணில் என்னையே பார்த்திருப்பாய்
எனக்குத் தெரியும், நீ தூக்கத்தை
என் கண்களில் வைத்திருக்கிறாயென்று தெரியும்,
விளக்கை அணைத்துவிட்டு வந்து படுப்பேன்
நீயும் உன் விளையாட்டைப் போட்டுவிட்டு வந்து
என் கைமீது படுத்துக் கொள்வாய்,
உனக்குத் தலையணை வைத்ததில்லை நான் – என்
உயிரெல்லாம் திரண்டு நீ படுத்திருக்கும்
ஒரு கையில் உசந்துகிடக்கும்..