Paristamil Navigation Paristamil advert login

மகளெனும் கடல்..

மகளெனும் கடல்..

4 ஆடி 2021 ஞாயிறு 07:46 | பார்வைகள் : 10670


நானும் மகளும் கடலுக்கு

போகிறோம்,
முன்னே ஓடியவள்
கரையில் தடுக்கி சடாரென
தண்ணீருள் விழுகிறாள்,
அலை மூடிக்கொள்கிறது
மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது
மகளைக் காணோம்
மகளையெங்கே காணவில்லையே
ஐயோ மகளென்று பதறி
ஓடி கடலில் குதிக்கிறேன்;
 
மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி
அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள்,
கையை ஆட்டி ஆட்டி ஏமாத்திட்டேனே என்கிறாள்,
 
தண்ணீரில் கூட வியர்த்தது
எனக்கு
உடம்பெல்லாம் பதறுகிறது..
 
அவள் சிரிக்கிறாள் சிரிக்கிறாள்
அப்படிச் சிரிக்கிறாள்
என்னம்மா என்கிறேன்
ஐயோ அப்பா அப்பா என்கிறாள்
 
பயந்தே போனேன்மா என்றுச்
சொல்லவில்லை
அவளதைக் கேட்கவுமில்லை
அவளுக்கு சிரிப்பே சோறு
சிரிப்பிற்கே விளையாட்டு
 
எங்கே காணினும்
கடலெங்கும் அவள் சிரிப்பு
அவள் சிரிப்பு
என் உயிரெங்கும் அவள் சிரிப்பு..
அவள் சிரிப்பு..
 
சிரித்து சிரித்து சிரித்து
அவளுள் இருக்கும் நான்
மெல்ல மெல்ல அடங்கியதற்கும்
அவளோடு சேர்ந்து நான்
வாய்விட்டு சிரித்ததற்கும்
இந்த கடலின்று சாட்சி..
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்