Paristamil Navigation Paristamil advert login

வானத்தின் நாணம்...!!

வானத்தின் நாணம்...!!

14 ஐப்பசி 2018 ஞாயிறு 15:26 | பார்வைகள் : 9707


கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில்

 
காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க
 
நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி
 
நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல்,
 
அந்தி மயங்கும் நேரத்திலே
 
ஆதவனின் பொற்கரங்கள்
 
அன்பு கொண்டு தழுவியதால்
 
அந்தி வானம் சிவந்ததுவோ!.
 
 
 
சித்தினியின் சித்தமது சிறகடிக்க
 
வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க
 
காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க
 
கைகளினால் முகம் மறைத்த காதலி போல்,
 
கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க
 
வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற
 
வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க
 
மேகம் எனும் கரங்களினால் முகம் மறைத்தாளோ!.
 
 
 
வான் மகளைத் தீண்டிவிட்டு
 
ஆதவனும் மறைந்து விட்டான்
 
ஆனாலும் மேல் வானம்
 
ஏன் இன்னும் சிவந்திருக்கு?
 
காதலனைப் பிரிந்த பின்னும்
 
கன்னி முகம் சிவந்திருக்கும்
 
காதலனின் நினைவுகளில்
 
கன்னியவள் மிதப்பதனால்!!.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்