காணாமலாக்கப்பட்டோர் கதையிது
2 புரட்டாசி 2018 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 9362
ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி
மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து
புள்ளி முட்டையிடும் மஞ்சள் மூக்கு ஆக்காட்டி
எங்கே நீ போனாய் உன்குஞ்சுகளை ஏங்கவிட்டு ?!
ஆளரவம் கேட்டுவிட்டால் வானுயரப் பறந்து ..
வட்டமிட்டு கீச்சுக் குரலெழுப்பும் என்ராசாத்தி
காணாமல் உனையெண்ணி கண்ணீர் விட்டு
கதறுதுந்தன் மூன்று குஞ்சு கண்மணியே ஓடிவா நீ !
மூத்தகுஞ்சுக்கு இரைதேட முழங்காவில் சுற்றிவந்தேன்
இரண்டாம் குஞ்சுக்கு இரைதேட இரணைமடு சுற்றிவந்தேன்
கடைசிக்குஞ்சுக்கு இரைதேட கரைச்சிக்குடியிருப்பு
இராணுவமுகாமோராம்… நான்பறந்து போகையிலே போகையிலே
போட்டிருந்த தடைவேலியில் என்சிறகிரண்டும் சிக்கிக்கொள்ள
என்அபயக் குரல் கேட்டு துப்பாக்கி வேட்டு வந்து என்மார்புதைக்க …
வலிதாங்க முடியாமல் துடிதுடித்து நான் அழுத கண்ணீரோ….
ஆறாய்ப்பெருக்கெடுத்தது என் ஆற்றாமையை வெளிக் காட்டிநிற்க ;
குளமாய்ப் பெருகி குருதி தோய்ந்த என்னுடல் நனைக்க …
ஏரிபோல்தேங்கி என்போன்றோர் ஏக்கமெல்லாம் எடுத்துரைக்க….
நான் பெற்ற குஞ்சுகளே! என்ஊரின் பிஞ்சுகளே! நான் திரும்பவழியில்லை !!
என்போல் காணாமல் ஆக்கப்பட்ட கனபேரின் கதை இதுதான்!!
-பிறேமலதா பஞ்சாட்சரம்