தன்மதிப்பு
5 தை 2020 ஞாயிறு 16:29 | பார்வைகள் : 9658
நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின்
அதிபதிகள்என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே
என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்.