கோபம் முதல் முத்தம் வரை...!
11 புரட்டாசி 2019 புதன் 18:11 | பார்வைகள் : 9769
ஊருக்கே கேட்குமளவுக்கு
உரக்க கத்துகிறான் அவன்...!
முறைக்கும் அவன் விழிகளுக்கு
முதன்முதலாய் பயப்படுகிறேன் நான்...!!
கவிதை சொன்ன அவன் விழியும்,
காதல் பேசிய குரலும் - என்னை
கடித்து குதற
காலம் பார்க்கின்றன...!
முகம் முழுதும் பயத்தையும்,
அகமெங்கும் அன்பையும் சுமந்துகொண்டு
அதையும் நான்
அவனுக்கு தெரியாமல் ரசிக்கின்றேன்...!
அவனுக்கு நான்
அடங்கி போவதில்
ஆணவம் அவனுக்கு...!
எனக்கும்தான்...
எதிர்த்து பேச
எத்தனிக்கும் என் மனதை
உள்ளுக்குள்ளே
ஊமையாக்குகிறேன்...!
அமைதியாய் - நான்
அமர்ந்திருப்பதாலென்னவோ
ஒரு நிமிடத்திலே - அவன்
ஒருவழியாய் ஓய்ந்துவிடுகிறான்...!!
இறுகிய அவன் முகமும்
இருண்டொரு மணி நேரத்தில்
இதழ் முத்தமொன்றில்
இயல்பாகிவிடுகிறது...!!
ஒருவரின் கோபத்தை குறைக்க
இன்னொருவரின் மவுனத்தை தவிர
இங்கு எளிய வழியொன்றுமில்லை...!
பின்பொருநாள்...
உரக்க கத்துதலில் ஆரம்பித்த
என் கோபமும்,
அவன் மவுனங்களின் முடிவில்
அவன் எனக்களித்த
உதட்டுக்காயத்திலே முடிந்தது...