மரணத்திற்குப் பின் என் வீடு....!
3 சித்திரை 2017 திங்கள் 10:59 | பார்வைகள் : 10252
தவறாது
எல்லோருக்கும்
தகவலை
அனுப்பி விடுங்கள்....
இல்லையேல்
அவர்களது அன்பிற்கு
எதிர்வினையாற்றவில்லையென
ஏமாறக்கூடும்!
பத்திகளை
அதிகம் கொளுத்தாதீர்கள்
அதன் நெடி
நாசியேறி
என்னை விட்டு
விலகி நிற்கச் செய்யக்கூடும்!
முடிந்தால்
சிறுதூரலென பரவும்
மெல்லிசையை
இசைக்கச் செய்யுங்கள்
அது ஒரு வேளை
நான் இறக்கவில்லை
இருக்கிறேன் எனும்
உணர்வைத் தரக்கூடும்!
நாற்காலியில்
இறுக்கமாய்
கட்டி விட வேண்டாம்..
தளர்வாய்
கால் நீட்டியபடியே
படுக்க வைத்துவிடுங்கள்.
பிள்ளைகளை அதட்டாதீர்கள்!
பாவம் அவர்கள் என்னைப்
பார்த்து பயந்திடக்கூடும்!
குளிப்பாட்டுகிறேன் பேரில்
கூட்டம் சேர்க்காதீர்கள்!
ஒதுங்கி நிற்கும் என் ஆன்மா
கூச்சமடையக் கூடும்.
முகத்தில் மஞ்சளை மிதமாக்குங்கள்
பெரிதாய் பொட்டு வேண்டாம்
எப்போதும் நான் வைக்கிற
பொட்டு குளியலறையில்
ஒட்டியிருக்கக்கூடும்!
அதுவே போதுமானது...
ஆபரணங்கள் மீது
அதிக ப்ரியமில்லையெனக்கு
ஆனாலும்..
என்னைப் பார்க்க வருபவர்களுக்கு
எப்போதும் போலிருக்க வேண்டும்
சிதையேறும் வரை
சிறிது நேரம் இருக்கட்டும்...
கடைசியாய் ஒருமுறை
முகம் பார்த்துக்கோங்கனு
வெட்டியான் அழைக்கக்கூடும்!
தயவு செய்து தயவுசெய்து
அழுத முகத்தோடு என்னை
யாரும் பார்க்க வேண்டாம்..
எனக்கும் இதுதான்
கடைசி முறை
உங்கள் முகம் பார்ப்பதற்கும்!