ஒரு கோப்பை அழுகை
15 பங்குனி 2015 ஞாயிறு 05:38 | பார்வைகள் : 10324
குடிகாரன் அவனுக்கென்ன கவலை..?
புத்திக்கு எட்டாத போதையில்
மயங்கி அவன் கிடக்கையில்,
மளிகை சாமான்களும்,
மண்ணெண்ணை தீர்ந்ததும் என
திட்டித் தீர்க்கும் என் புலம்பல்…!!
அப்பன் அவனுக்கென்ன கவலை..?
மதிய உணவாவது
மகன் ஒழுங்காய் தின்னட்டுமென,
கிழிந்த மேல்சட்டையுடன்
புத்தகப்பை ஏதுமின்றி
பள்ளிக்கு அனுப்பும் என்பாடு…??
திருடும் அவனுக்கென்ன கவலை..?
பல்லைக் கடித்துக் கொண்டே
பகலெல்லாம் சம்பாதித்த
பத்து ரூபாய் பணத்தை,
பசியுடுடன் வரும் மகனுக்காக
பத்திரப்படுத்தும் என் தவிப்பு..!!
மிருகம் அவனுக்கென்ன கவலை..?
அவனில்லாத ராத்திரியில்
அன்னியர் எவனோ
கதவை தட்டும் போதும்,
அக்கம்பக்கம் தவறாய் பேசும்போதும்
அனாதையாய் அழும் என் நிலை….!!
முட்டாள் அவனுக்கென்ன கவலை..?
மது உச்சத்தில்
சிறு பிள்ளையாய் தினம்
அவன் கக்கும் கழிவுகளை,
முகம் சுழிக்காமல்
முகம் துடைத்துவிடும் என் நேசம்,,!!
சுகவாசி அவனுக்கென்ன கவலை..?
ஒரு கோப்பை மதுவுக்குள்
அவன் மூழ்கி மிதக்கையில்,
குடி முழுகிப் போனதற்காக
ஒரு கோப்பை அழுகை
நிரப்பிய என் கண்கள்..!