சாதி மறு! சண்டையொழி!
3 ஆனி 2018 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 9865
சதையறுக்கும் பச்சைவாசம்
ஐயோ சாதிதோறும் வீசவீச,
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!
மாக்க ளூடே சாதி வேறு
மண்ணறுக்கும் சாதி வேறு
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்
சாக்கடையில் விட்டெறிடா!
பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை
தகதிமிதோம் ஆடுதுவே;
ஐயகோ பூமிப் பந்தை
அற்பசாதி அறுத்திடுமோ
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?
வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்
இனி மிருகங்களே காரி உமிழும்!
மிச்சத்தை மீட்கவேனும்
மனிதர்களாய் ஒன்று கூடு,
அங்கே ஆடையற்று கூட நில்
சாதியோடு நின்று விடாதே;
சாதியை விடு..
சாதி போகட்டும் விடு..
ஓ மனிதர்களே வா’
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”
சொல் “நான் சாதியற்றவன்”
சாதியற்ற இடத்தில்தான் நாளை
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,
மழை நிலா காற்று போல நாமும்
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்!