Paristamil Navigation Paristamil advert login

காரம் நிமித்த இரவுகள்...!

காரம் நிமித்த இரவுகள்...!

27 வைகாசி 2018 ஞாயிறு 14:10 | பார்வைகள் : 9795


அல்சர் புண்ணேறிய
பொத்தல் வயிறு குறித்து
அக்கறைப்பட்டு காது நீட்டும்
ஒரே ஓர் இரவு உணவக முதலாளியையும்
இன்னும் நான் கண்டடையவில்லை.
 
ஊரில் மல்லிகா சித்தி
அரைக்கும் தேங்காய் சட்னிக்கு
நாக்கை அறுத்துக்கொடுக்கும்
ருசியில் திளைத்தவன்.
 
இங்கு
ஏழே முக்காலுக்கு மேல்
உணவகம் செல்ல நேர்கையில்
வாளி அடித் தடவி
ஒரு இட்லி மட்டும்
லேசாக நனைகிறது.
 
`ஆம்லெட் ஒன்று’ என்றதும்
`பெப்பர் தூக்கலா?’ எனக் கேட்கும்
சிப்பந்தி சிறுவனிடம்
`பெப்பரே வேணாம்’ என்ற
பதில் கேட்டதும்
மேலும் கீழும் பார்க்கிறான்.
 
மாலைப் பொழுது
கடை வந்தடையும்
அத்தனை பறவைகளும்
கள்ளுண்டு வருவதாகவே எண்ணி
ஒரு கை காரம் தூக்கலான
சமையற்குறிப்புகளோடு
மிளகாய்களையே கண்களெனக்கொண்ட அவனை
தூரத்தில் பார்க்கையிலே
என் குலை நடுங்கும்.
மாதமோ கார்த்திகை என்பதால்
கடைமுதலாளி, மாஸ்டர் என
எல்லோரும் மாலை அணிந்து
நோன்புற்றிருக்கின்றனர்.
 
கடைசி மேசையிலிருந்து
மங்கலான குண்டு பல்பு
வெளிச்சத்தில்
கல்லாப்பெட்டியில் இருப்பவர் கழுத்தில் காற்றிலாடுவது
பெருங்குடல்போல் தெரிகிறது.
 
அதோ
அந்தச் சிப்பந்தி
கழுத்தில் அணிந்துள்ளான்
சிறுகுடலை.
பரோட்டா மாஸ்டர்
அழுத்திப் பிசைவது
என் கல்லீரலைத்தான்.
 
நெருங்கிவிட்டான்
வாளி நிறைய என் ரத்தத்தைச்
சுடச்சுடக் கொண்டுவரும்
ஒருவன்.
 
வந்ததும் கேட்கிறான்...
`குடல் ஒன்று
ஆர்டர் பண்ணட்டுமா சார்?’

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்